சகோதரனின் கையை பிடித்து ராக்கி கட்டும்போது 20 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி

சகோதரனின் கையை பிடித்து ராக்கி கட்டும் போது 20 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 16 வயது சிறுமி உயிரிழந்தார்.
Uttar Pradesh Raksha Bandhan tragedy
Published on: 

உத்தரப் பிரதேசத்தில் சகோதரனின் கையில் ராக்கி கட்டுவதற்காக தனது வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுமி ஒருவர், தவறி 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் அவரை வெளியில் எடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் சுமார் 35 கி.மீ. தொலைவில் புர்வாமிர் என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் சுட்சி ஷர்மா என்ற 16 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் முற்றத்தில் ரக்‌ஷ பந்தனை கொண்டாடும் வகையில் தனது சகோதரனின் கையில் ராக்கி கட்டுவதற்காக நின்று கொண்டிருந்தார்.

காலை 6:40 மணியளவில் அந்த சிறுமி தனது சகோதரனின் கையை பிடித்து ராக்கி கட்ட முயன்றபோது, வீட்டின் முற்றத்திற்கு அருகில் மூடாமல் இருந்த 20 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.

இதையடுத்து சிறுமியின் சகோதரன் கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் வந்து ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்க முயற்சி செய்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மகாராஜ்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) வீரர்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணி குறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி தீபக் சர்மா கூறுகையில், தீயணைப்புத் துறையைச் சேர்ந்த குழுக்கள் உதவியுடன் சிறுமியை மீட்கும் பணியில் சுமார் 60 மீட்புபடை வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறினார்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை சென்றடைவதற்காக, மீட்புக் குழுவினர் அருகில் ஒரு குழியைத் தோண்டினர்.

ஆழ்துளை கிணற்றையும் வீட்டையும் சுற்றியுள்ள தரை உறுதியற்றதாக இருந்ததாலும், மேலும் ஒரு சரிவு ஏற்படக்கூடும் என்ற கவலைகள் எழுந்ததாலும், இந்த மீட்புப் பணியை கவனமாக மீட்பு படை வீரர்கள் மேற்கொண்டனர்.

இதற்கிடையில் பல மணி நேர போராட்ட முயற்சிக்குப் பிறகு, மீட்புக் குழுவினர் அந்த சிறுமியை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து, அருகில் இருந்த சர்சால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது குறித்து குடும்பத்தினர் கூறுகையில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முற்றத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. ஆனால் பணியை முடிக்க முடியாததால் அது கைவிடப்பட்டது.

பின்னர் மற்றொரு இடத்தில் இரண்டாவது ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு மண்ணைப் பலவீனப்படுத்தியதால், சமீபத்திய மழையின் காரணமாக மண் சரிந்து விழுந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com