"காதல் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் துணையின் உணர்வுகளை மதிப்பதாகும்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெர்மனியில் பிறந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன்.
கைகளில் மருதாணி, மணிக்கட்டில் 'பாரம்பரிய வளையல்கள்' அணிந்து பஞ்சாபி மணப்பெண்ணாக மாறிய அவர், தனது கணவரின் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.
ஜெர்மனியில் வசிக்கும் 42 வயதான ராபின் சிங் (பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியர்), ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பியா பிளாங்கர்மேனை ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்று பஞ்சாபின் மொஹாலியில் உள்ள ஒரு குருத்வாராவில் சீக்கிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
தனது மறைந்த தந்தையின் பஞ்சாபி வேர்களைக் கௌரவிப்பதற்காக, ஜெர்மனியிலிருந்து 6,000 கிலோமீட்டர் பயணம் செய்து ராபின் இந்த திருமணத்தை நடத்தியுள்ளார்.
1980களின் தொடக்கத்தில், ராபினின் தந்தை ஜகதார் சிங் டூர் வேலை தேடி ஜெர்மனிக்கு குடியேறினார். 1983 இல், அவர் அனெக்ரெட் என்ற ஜெர்மன் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
அப்போது நிலவிய சூழ்நிலை காரணமாக அவர்களால் இந்தியா வர முடியாமல், ஜெர்மனியிலேயே பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ராபின், ஜென்னி என இரு குழந்தைகள் பிறந்தனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜகதார் சிங் மாரடைப்பால் காலமானார். அவரது திருமணமும், இறுதிச் சடங்குகளும் ஜெர்மனியிலேயே நடந்ததால், பஞ்சாபில் உள்ள அவரது பெற்றோரால் குடும்பத்தில் ஒரு திருமணத்தைக் கூட நேரில் பார்க்க முடியாமல் போனது.
தனது தந்தையின் ஆசையையும், தாத்தா பாட்டியின் ஏக்கத்தையும் உணர்ந்த ராபின், தனது திருமணத்தை நிச்சயம் பஞ்சாபில் தான் நடத்துவேன் என்று தனது அத்தைகளுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த திருமணத்திற்காக ராபினின் ஜெர்மன் தாய் அனெக்ரெட் (69), அவரது சகோதரி மற்றும் ஜெர்மன் நண்பர்கள் இந்தியா வந்திருந்தனர். அதேபோல், மணப்பெண் பியாவின் தாய் ரெஜினா மற்றும் அவரது நண்பர்களும் பஞ்சாப் வந்தனர்.
மணமகள் பியாவிற்கு பஞ்சாபி மொழி தெரியாது என்றாலும், திருமண சடங்குகளின் போது அனைவரும் நடனமாடி மகிழ்ந்த போது அவரும் இணைந்து மகிழ்ந்தார். ஜெர்மனி குடும்பத்தினர் வசதியாக உணர்வதற்காக திருமணத்தில் ஜெர்மன் இசையும் இசைக்கப்பட்டது.
மணமகளின் தாய், சகோதரி மற்றும் நண்பர்கள் பாரம்பரிய பஞ்சாபி உடைகளை அணிந்தும், பஞ்சாபி நாட்டுப்புற பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.
கூடைப்பந்து பயிற்சியாளரான ராபின், சமூகப் பணியாளரான பியாவிடம் பஞ்சாப் திருமணத்தைப் பற்றிக் கூறியபோது, அவர் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். எனினும், இந்தியத் திருமணங்கள் பிரமாண்டமாக இருக்கும் என்பதால், சடங்குகளைத் தவறாகச் செய்து யாருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்பதில் பியா மிகவும் கவனமாக இருந்தார்.
இதற்காக, ஒர்க் வைத்த உடைகள், உரத்த இசை மற்றும் நடனங்களுக்கு மனதளவில் தயாராகி யூடியூப் விடியோக்களைப் பார்த்து பியா தன்னை தயார் படுத்திக்கொண்டதாக ராபின் கூறினார்.
மறைந்த தந்தையின் மீதான பாசத்திற்காக, எல்லைகளையும் கலாச்சாரங்களையும் கடந்து நடந்து முடிந்த இந்த சர்வதேசத் திருமணம் அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.
இந்த ஜோடி ஜெர்மனி திரும்பியதும் அங்கு அவர்களின் முறைப்படி மற்றுமொரு கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் பரவி வருகிறது.