

ஜென் இசட், ஜென் ஆல்பா தலமைமுறை மாணவர்களிடம் உண்மையான அறிவு இல்லை என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
ஜென் இசட், ஜென் ஆல்பா தலமைமுறை மாணவர்களிடம் தகவல்கள் இருந்தாலும், அவர்களிடம் உண்மையான அறிவு இல்லை என்று மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற சர்வதேச முதல்வர்கள் கல்வி மாநாட்டில் தேவேந்திர பட்னாவிஸ் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், " தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சிக் காலத்தில் பிறந்த 'ஜென் சி' மற்றும் 'ஜென் ஆல்பா' தலைமுறையினரிடம் ஏராளமான தகவல்கள் உள்ளன, ஆனால் அவர்களிடம் உண்மையான அறிவு இல்லை. அதாவது தகவல்களை அறிவாக மாற்றும் திறன் இல்லை.
தகவல்கள் ஏராளமாகக் கிடைப்பது மட்டுமே போதாது. குழந்தைகள் அத்தகவல்களைப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியாகப் பயன்படுத்த கற்பிக்கப்பட வேண்டும்.
விரைவான தொழில்நுட்ப முன்னேற்றக் காலத்தில் வளர்ந்து வரும் இந்தத் தலைமுறையினருக்கு, கிடைக்கும் தகவல்களைத் தங்களின் அறிவை மேம்படுத்தும் வகையில் பயன்படுத்தக் கற்பிப்பது ஆசிரியர்களின் பொறுப்பு.
குழந்தைகளின் கற்றலில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களின் பங்கு இன்றியமையாதது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கல்வி முறைகளும் மாற வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும் செயற்கை நுண்ணறிவால் மனித உணர்வுகளையும் ஒழுக்கங்களையும் மாற்றீடு செய்ய முடியாது என்றும் பட்னாவிஸ் கூறினார்.
தொடர்ந்து பட்னாவிஸ் தனது உரையில் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம், கைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு ஆகியவற்றை குறிப்பிட்டார்.
தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான கடந்த ஜூன், ஜூலையில் சிஜேபி நடத்திய போராட்டத்தில் ஏரளமான ஜென் இசட் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
தற்போது தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடந்து வரும் போராட்டங்களிலும் ஜென் இசட் இளைஞர்கள் முன்னிலை வகிக்கும் வேளையில் பட்னாவிஸின் கருத்து வந்துள்ளது.
1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் இசட் என்றும் 2013 முதல் 2024 மற்றும் அதற்கு பின் பிறந்தவர்கள் ஜென் ஆல்பா என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.