மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள புகழ்பெற்ற பிராந்திய மாதிரிப் பள்ளியை, கேந்திரிய வித்யாலயா சங்கத்துடன் இணைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக, அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் வீதியில் இறங்கி தங்களின் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவால், பல தசாப்தங்கலாகத் தனித்துவமாகச் செயல்பட்டு வரும் தங்களது நிறுவனத்தின் நோக்கம் முற்றிலும் சிதைந்துவிடும் என்று மாணவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
போபாலில் உள்ள 'டெமான்ஸ்ட்ரேஷன் மல்டிபர்ப்பஸ் பள்ளி' வளாகத்திற்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள், கைகளில் பதாகைகளை ஏந்தி, இணைப்புத் திட்டத்திற்கு எதிராக ஆக்ரோஷமாக முழக்கங்களை எழுப்பினர்.
தற்போதைய நவீனத் தலைமுறையைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள், தங்களின் கல்வி உரிமைக்காகவும், பள்ளியின் தனித்துவத்திற்காகவும் திரண்டது போபால் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் கடந்த 1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ரீஜனல் பள்ளிகள் தொடங்கப்பட்டன.
இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் (போபால், அஜ்மீர், மைசூர் மற்றும் புவனேஸ்வர்) மட்டுமே இத்தகைய மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட்டன. வழக்கமான கல்வி முறையைப் பின்பற்றாமல், புதிய கற்பித்தல் முறைகளை உருவாக்குவதற்கும், கல்வியில் புதுமையான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகளைச் செய்வதற்கும் இந்த ரீஜனல் பள்ளிகள் பிரத்யேகமாகத் தோற்றுவிக்கப்பட்டன.
தற்போது இந்தப் பள்ளியைப் பொதுவான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுடன் இணைப்பதன் மூலம், இதன் ஆராய்ச்சித் தன்மையும், தனித்துவமான அடையாளமும் முற்றிலும் அழிந்துவிடும் என்று மாணவர்கள் தரப்பில் கூறிவருகின்றனர்.
போராட்டத்தின் இறுதியாக, மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிராந்தியக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எஸ்.கே. குப்தாவைச் சந்தித்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் அதிகாரப்பூர்வக் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், "இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தங்களது பள்ளியை மேலும் வலுப்படுத்தி, கல்வி ஆராய்ச்சி மையமாகவே தொடர அனுமதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் உடனடியாகச் செவிசாய்க்கவில்லை எனில், அடுத்தடுத்த கட்டங்களாகத் தங்களது போராட்டத்தை மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளை நோக்கித் தீவிரப்படுத்தப் போவதாகவும் பள்ளி மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.