தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்புடைய பிரபல தாதா என்கவுண்டரில் சுட்டுக்கொலை

நசீம் துர்ரானி பயன்படுத்திய 2 கைத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Naseem durrani
Published on: 
Summary

நசீம் துர்ரானி, உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷஹர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நசீம் துர்ரானி

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் நசீம் துர்ரானி. தாவுத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்புடைய பிரபல தாதாவான இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதற்கிடையே கடந்த 16-ந்தேதி டெல்லியின் சோனியா விஹார் பகுதியில் சமீர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் நசீம் துர்ரானிக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

என்கவுண்டர்

இந்த நிலையில் நசீம் துர்ரானி, உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷஹர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி போலீசார், உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படை இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சிக்கந்திரா பகுதியில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற நசீம் துர்ரானியை சுற்றி வளைத்தபோது அவர் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து போலீசார் எதிர்தாக்குதலாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டுகள் பாய்ந்து நசீம் துர்ரானி காயம் அடைந்தார்.

உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நசீம் துர்ரானி பயன்படுத்திய 2 கைத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் கூறும்போது, நசீம் துர்ரானிக்கும் நிழல் உலக தாதா சோட்டா ஷகீலுக்கும் தொடர்பு இருந்தது. 2016-17-ம் ஆண்டு காலகட்டத்தில், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோட்டா ராஜனை கொலை செய்வதற்கான ஒப்பந்தத்தை நசீம் துர்ரானியிடம் சோட்டா ஷகீல் வழங்கினார் என்றனர்.

X