ரூ.90 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய இளைஞர் - ரூ.30,000 முதலீட்டில் மாதம் ரூ.12 லட்சம் சம்பாதித்து அசத்தல்!

சிறிய சோதனை முயற்சிதான் இன்று ‘கிரீனு மைக்ரோகிரீன்ஸ்’ என்ற மிகப்பெரிய பிராண்டாக உருவெடுத்துள்ளது.
Micro greens
Published on

நம்மில் பலருக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம் என்பது ஒரு கனவாகவே இருக்கும். ஆனால், சண்டிகரைச் சேர்ந்த மோஹித் நிஜவான் என்று இளைஞருக்கு, அது வெறும் ஆரம்ப புள்ளியாகவே இருந்துள்ளது.

கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்ற மோஹித், தனது கைநிறைய சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலையை கடந்த 2020 ஆண்டு டிசம்பரில் விட்டுவிட்டு, முற்றிலும் மாறுபட்ட துறையான உள் அரங்கு விவசாயத்தில் கால் பதித்து இன்று கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.

ரூ.30,000 முதலீட்டில் தொடங்கிய சோதனை முயற்சி

ஆரம்பத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய விரும்பாத மோஹித், வெறும் ரூ.30,000 முதலீட்டில் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள 100 சதுர அடி சிறிய அறையில் மைக்ரோகிரீன்ஸ் (முளைக்கீரை/இளம் ஊட்டச்சத்து தாவரங்கள்) வளர்க்கத் தொடங்கினார்.

ஆரம்பக் கட்டத்தில் விவசாயத்தின் நுணுக்கங்கள், உற்பத்தி முறைகள், வாடிக்கையாளர்களைக் கண்டறிதல் மற்றும் ஒரு நிலையான வணிக மாதிரியை உருவாக்குதல் என அனைத்தையும் அவரே சுயமாகக் கற்றுக் கொண்டார்.

இந்த சிறிய சோதனை முயற்சிதான் இன்று ‘கிரீனு மைக்ரோகிரீன்ஸ்’ என்ற மிகப்பெரிய பிராண்டாக உருவெடுத்துள்ளது.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செங்குத்து விவசாயம்

ஆரம்பத்தில் வெறும் மூன்று ரேக்குகள், தட்டுகள், வளர்ப்பு விளக்குகள் மற்றும் விதைகளைக் கொண்டு செங்குத்து உள்ளரங்கு விவசாயத்தை மோஹித் தொடங்கினார்.

முற்றிலும் மரபணு மாற்றப்படாத மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாத இயற்கை முறையில் 21 வகையான ஆர்கானிக் மைக்ரோகிரீன்ஸ் வகைகளை வளர்ப்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தினார்.

தற்போது இந்த வணிகம் பல மடங்கு விரிவடைந்துள்ளது. இப்போது 500 சதுர அடி பரப்பளவிலான அதிநவீன வசதிகள் கொண்ட பண்ணையாக இது மாறியுள்ளது.

இங்கு சுமார் 60 ரேக்குகள் அமைக்கப்பட்டு, மாதத்திற்கு 12,000 தட்டுகள் மைக்ரோகிரீன்ஸ் உற்பத்தி செய்யும் அளவிற்குத் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மாதம் ரூ.12 லட்சம்... ஆண்டுக்கு ரூ.1.44 கோடி வருவாய்

தற்போது 'கிரீனு மைக்ரோகிரீன்ஸ்' நிறுவனம் மூலம் மோஹித் நிஜவனுக்கு மாதத்திற்கு சுமார் ரூ.12 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆண்டு வருமானமாக தோராயமாக ரூ.1.44 கோடியை பெற்று வருகிறார்.

இது குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் இவரது வீடியோ காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com