

விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் தங்களின் காத்திருப்பு நேரத்தை பயனுள்ளதாக செலவிடும் வகையில் ‘ஃப்ளைபிரரி’ என்ற திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின்படி விமான நிலையத்தில் தங்கள் விமானத்திற்காக காத்திருக்கும் பயணிகள், ஒரு புத்தகத்தை இலவசமாக பெற்று, பின் அதை திருப்பி கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃப்ளைபிரரி திட்டம்
ஃப்ளைபிரரி திட்டம் என்பது விமான நிலையத்திற்குள் இருக்கும் ஒரு இலவச நூலக சேவையாகும். விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அங்குள்ள அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களில், தங்களுக்கு பிடித்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
அந்த புத்தகத்தை விமான நிலையத்தில் காத்திருக்கும் போதும் அல்லது பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் விமானத்திலும் எடுத்து சென்று படிக்கலாம்.
புத்தகத்தை எடுத்து கொண்டு விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள், தாங்கள் சென்று சேரும் இடத்தை அடைந்தவுடன், அங்குள்ள ஃப்ளைபிரரி புத்தக நிலையத்தில் புத்தகத்தை திருப்பி கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சில விமான நிலையங்களில் பயணிகள் தாங்கள் எடுத்த புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து சென்று, பின்னர் தாங்கள் அடுத்ததாக விமான நிலையத்திற்கு வரும்போது திருப்பி கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃப்ளைபிரரி திட்டத்திற்கு, பயணிகள் தங்களின் சொந்த புத்தகங்களையும் நன்கொடையாக வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃப்ளைபிரரி திட்டம் அறிமுகம்
பக்குல் அறக்கட்டளையின் நிறுவனர் சுஜித் மகாபாத்ரா, இந்திய விமான நிலையத்துடன் இணைந்து ஃப்ளைபிரரி திட்டத்தை, 2025ஆம் ஆண்டு புவனேஷ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகம் செய்தார்.
இதையடுத்து இந்த திட்டம் தற்போது இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விரிவடைந்து, புவனேஷ்வர், ராஞ்சி, புஜ், தர்பங்கா, கஜுராஹோ, குலு-மனாலி, மங்களூரு, டையூ மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட 68 விமான நிலையங்களில் பயன்பாட்டில் உள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சர்
இந்த ஃப்ளைபிரரி திட்டம் குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகம் நாயுடு கிஞ்சரபு கூறுகையில், பயணிகள் ஃப்ளைபிரரி திட்டத்தை வரவேற்பதை கண்டு தான் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
மேலும் குழந்தைகள் விளையாட்டு அம்சங்கள், இலவச வைஃபை மற்றும் சுய உதவிக் குழு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றுடன், ஃப்ளைபிரரி திட்டமும் பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.