

இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், டெல்லியில் தனது வழக்கமான நடைபயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எழுபத்தைந்து வயதான ஜகதீப் தன்கர், இன்று காலையில் வழக்கம் போல் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென நிலை குழைந்து விழுந்துள்ளார். சில நிமிடங்கள் சுயநினைவை இழந்த அவரை, உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் காவல்துறையினர் வாகனத்தில் பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்கு வந்த சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் அவரைப் பரிசோதித்த போதிலும், உடல் நலனில் தொடர் கவனம் மற்றும் கூடுதல் மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படுவதால் அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் கார்டியோ-நியூரோ மையத்தில் அனுமதிக்கப்பட்டு, இருதயவியல் துறை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜகதீப் தன்கருக்கு கடந்த காலங்களிலும் இதேபோன்று திடீர் மயக்கம் மற்றும் உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நெஞ்சுவலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் செய்யப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நைனிதாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் மயங்கி விழுந்திருந்தார். உடல்நிலையைக் கருத்தில் கொண்டே கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்குத் தேவையான நரம்பியல் மற்றும் இருதயவியல் சார்ந்த உயர்தர பரிசோதனைகள் தீவிரமாகத் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வமான விரிவான மருத்துவ அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. தொடர்ந்து மருத்துவர்கள் அவரது உடல்நிலையை மிகவும் கவனமுடன் கண்காணித்து வருகின்றனர்.