

தேர்வு முறைகேடு புகாரில், ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் எல். கியாங்டே, குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரியில் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜூலை.22ம் தேதி இப்பதவியை ராஜினாமா செய்தார்.
இவ்விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதே தனது ராஜினாமாவின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
14-வது ஜார்க்கண்ட் சிவில் சர்வீசஸ் ஆரம்பத் தேர்வு மற்றும் பிற அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அரசுத் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் தலைநகர் ராஞ்சியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் ஒருபகுதியாக மாணவர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது, போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களைக் கலைத்தனர்.
மாணவர் அமைப்பினர் அரசுடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும் சிஜிஎல் தேர்வை ரத்து செய்ய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இவ்விவகாரம் போராட்டமாக வெடித்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது.