

கவுகாத்தியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று (திங்கள்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம், அசாம் காவல் தலைமையகத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில், போரா சர்வீஸ் எதிரே அமைந்துள்ள 'ஹோட்டல் பிலாஸ் இன்' என்ற இடத்தில் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கவுகாத்தி காவல் ஆணையர் பார்த்த சாரதி மஹந்தா, "நாங்கள் நான்கு உடல்களைக் கண்டெடுத்துள்ளோம். அவை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.
குற்றவாளிகளை கண்டறியும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், இது குறித்த கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை. இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்து, சிகிச்சைக்காக கவுகாத்தி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் .32-போர் உரிமம் பெறப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த துப்பாக்கி தற்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.