

ஜந்தர் மந்தரில் சிஜேபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
SIR விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 10-ந்தேதி போராட்டம் நடத்த இருப்பதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அப்ஜீத் தீப்கே தெரிவித்தார். அத்துடன் பல்வேறு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தார். இதற்கிடையே இதே காரணத்தை வலியுறுத்தி மூன்று நாட்கள் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது.
10-ந்தேதி போராட்டம் நடத்த டெல்லி வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அப்ஜீத் தீப்கே தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அப்போது அமைதியை சீர்குலைக்கும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. ஜந்தர் மந்தர் சீல் வைக்கப்பட்டது. அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை. அதற்கு பதில் வேறு 3 இடங்களில் போராட்டம் நடத்தலாம் என டெல்லி போலீசார் அறிவித்தனர்.
அந்தக் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களான அஷுடோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் உள்ளிட்டோர், நேற்று திடீரென ஜந்தர் மந்தரில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை தாண்டி உள்ளே சென்றனர். அவர்கள் தேசியக்கொடியை காட்டியபடி நின்றனர். அப்போது போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் 5 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதனால் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து, சிஜேபி-க்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் "ஜந்தர் மந்தரில் அமைதியான போராட்டத்தில் மூவர்ணக் கொடியை அசைப்பது குற்றமல்ல. அதற்காக இளைஞர்களைச் சிறையில் அடைப்பது கோழைத்தனமான செயலாகும்.
மாணவர்கள், இளைஞர்கள், பத்திரிகையாளர்கள், இந்தியா (INDIA) கூட்டணி - வெவ்வேறு கொடிகள், ஆனால் ஒரே நோக்கம். அனைத்துப் போராட்டங்களும் ஒன்றே. அவை தங்கள் அரசியலமைப்பு உரிமைகளை வலியுறுத்தும் குடிமக்களின் போராட்டங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே "சட்டவிரோதமாக அஷுடோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் கைது செய்யப்பட்டதற்கான பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.