

பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர்- சஹர்சா இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று அதிகாலை 3 மணியளவில் சஹர்சா மாவட்டத்தில் உள்ள சிம்ரி பக்தியார்பூர் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது என்ஜின் பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது.
சிறிது நேரத்தில் என்ஜினுடன் இணைக்கப்பட்ட மற்ற பெட்டிகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக ரெயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பயணிகள் ரெயில் சிம்ரி பக்தியார்பூர் நிலையத்தை அடைந்தபோது, அதன் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. திடீரென்று தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தீ விரைவாக அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த 3 பெட்டிகளுக்கும் பரவியது. தீ விபத்து நடந்த போது பெரும்பாலான பய ணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.
தீப்பிடித்து எரிவது பற்றிய தகவல் கிடைத்தவுடன், ரெயிலுக்குள் பீதி ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக ரெயிலில் இருந்து இறங்கி ஓடினார்கள். அனைத்து பயணிகளும் உரிய நேரத்தில் ரெயிலில் இருந்து வெளியேறிவிட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும், ரெயில்வே பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 2½ மணி நேரம் போராடிய பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து சிம்ரி பக்தியார்பூர் ரெயில் நிலையத்தில் காலை 6 மணிக்கு பிறகு மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
இவ்வாறு அவர் கூறினார்.