மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 9-ந்தேதியும், வேட்புமனு திரும்ப பெற கடைசி தேதி வருகிற 11-ந்தேதியாகும்.
மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
Published on

அ.தி.மு.க.வை சேர்ந்த சி.வி.சண்முகம் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் ஆகியோர் தற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ளனர். இவர்கள் உள்பட 24 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற 21-ந்தேதியில் இருந்து ஜூலை மாதம் 19-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் பல்வேறு நாட்களில் முடிவடைகிறது.

இந்த 24 பதவியிடங்களும் கர்நாடகம், ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், மணிப்பூர், மேகாலயா, அருணாசலபிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 10 மாநிலங்களில் காலியாகிறது. இதில் ஆந்திரா, குஜராத் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தலா 4 இடங்களும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்களும், ஜார்கண்டில் 2 இடங்களும், மணிப்பூர், மேகாலயா, அருணாசலபிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா 1 இடமும் காலியாகிறது.

இதனை முன்னிட்டு இந்த இடங்களை நிரப்புவதற்காக இந்திய தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 22-ந்தேதி தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தல் நடந்தபோது அ.தி.மு.க.வை சேர்ந்த சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும். எனவே எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்கு முன்பு மாநிலங்களவை எம்.பி. பதவியை சி.வி.சண்முகம் கடந்த மாதம் 7-ந்தேதி ராஜினாமா செய்தார். அந்த இடம் வருகிற 2028-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி வரை நீடிப்புதாக இருந்தது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனிடம் நேரில் கொடுத்தார்.

இந்தநிலையில் அவரது ராஜினாமா கடிதம் மாநிலங்களவை செயலகம் மூலம் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த இடம் காலியாக இருப்பது இந்திய தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த காலியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த 22-ந்தேதி வெளியிட்டது. அதன்படி மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி வருகிற 8-ந்தேதியாகும்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 9-ந்தேதியும், வேட்புமனு திரும்ப பெற கடைசி தேதி வருகிற 11-ந்தேதியாகும். தொடர்ந்து வருகிற 18-ந்தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு சில வாய்ப்புகள் மூலம் தேர்தல் நடக்கிறது. அதன்படி முதல் வாய்ப்பு, போட்டியிடும் வேட்பாளருக்கு மற்றவர்களை விட அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் அவரே தேர்வு செய்யப்படுவார். அந்த முறைப்படி த.வெ.க.வுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே த.வெ.க. நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இதனால் மற்ற கட்சிகள் வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு மிகக் குறைவு. அதன்படி பார்த்தால் வாக்குப்பதிவு நடக்காமலேயே போட்டியின்றி த.வெ.க வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். அதன் மூலம் த.வெ.க. கட்சி முதன் முதலாக டெல்லிக்கு சென்று நாடாளுமன்றத்தில் கால் பதிக்க முடியும்.

இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் சுனேத்ர அஜித் பவார் ராஜினாமா செய்த இடத்துக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com