

போலீசார் ரவிக்குமாரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ரவிக்குமாரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டம், சாந்தி நகரை சேர்ந்தவர் ஸ்ருஜனா (வயது 27). ஹனுமகொண்டாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதுகலை குழந்தைகள் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தனியார் ஆஸ்பத்திரியிலும் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் ஸ்ருஜனாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரவிக்குமார் என்ற வாலிபர் பழக்கமானார். இவர்களது பழக்கம் நட்பாக மாறியது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமார் அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி ஸ்ருஜனாவிடம் இருந்து தங்க சங்கிலி வாங்கிச் சென்றார்.
ஸ்ருஜனா தங்கச்சங்கிலியை திருப்பித் தருமாறு ரவிக்குமாரிடம் அடிக்கடி போன் செய்து கேட்டு வந்தார். கடந்த 29-ந்தேதி ரவிக்குமார் ஸ்ருஜனாவுக்கு போன் செய்து தங்கச்சங்கிலியை திருப்பி கொடுப்பதாக ஐதராபாத் வருமாறு கூறினார்.
ரவிக்குமார் மியாபூர், ஹபீஸ் பேட்டையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். ஸ்ருஜனா 30-ந்தேதி ரவிக்குமார் தங்கியுள்ள அறைக்கு சென்றார். அப்போது தங்கச் சங்கலியை திருப்பி தருமாறு ரவிக்குமாரிடம் கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
அப்போது ரவிக்குமார் ஸ்ருஜனாவை கட்டிலில் தள்ளி தலையணையால் அமுக்கி மூச்சியடைக்க வைத்து கொலை செய்தார். உடலை அறையில் பூட்டி விட்டு தப்பிச் சென்றார். வெளியே சென்ற ஸ்ருஜனா மீண்டும் திரும்பி வராததால் அவரது நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர்.
மறுமுனையில் பதில் வராததால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஸ்ருஜனாவின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மியாப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ருஜனாவின் செல்போன் எண்ணை வைத்து அவர் ஹபிஸ்பேட்டையில் இருப்பதை கண்டறிந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விடுதியில் விசாரணை நடத்தினர்.
விடுதி ஊழியர்கள் ரவிக்குமார் என்பவர் அறையில் தங்கி இருந்ததாக தெரிவித்தனர். போலீசார் அறையை திறந்து பார்த்து போது ஸ்ருஜனா படுக்கையறையில் பிணமாக கிடந்தார்.
போலீசார் ரவிக்குமாரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ரவிக்குமாரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் பெண் டாக்டர் வாழ்க்கை முடிந்து விட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.