9ஆம் வகுப்பு மாணவருக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கிய தந்தை: சாலை விபத்தை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மேற்கு வங்கம் மாநிலம் கல்சா பகுதியை அடுத்த பராஜ் கிராமத்தில் முகமது தல்ஹா என்ற மாணவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான்.
BMW Gifted to Student
Published on: 
Summary

மேற்கு வங்கத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர், தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றதை தொடர்ந்து, பிஎம்டபிள்யூ கார் ஒன்றை தனது மகனுக்கு அவரது தந்தை பரிசாக வாங்கி கொடுத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் கல்சா பகுதியை அடுத்த பராஜ் கிராமத்தில் முகமது தல்ஹா என்ற மாணவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த மாணவனுக்கு நீண்ட காலமாக ஒரு பிஎம்டபிள்யூ எம்4 (BMW M4) காம்பெடிஷன் காரை வாங்க வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது.

இதற்கிடையில் ஒன்பதாம் வகுப்பு அரையாண்டு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்தால், தான் ஆசைப்பட்ட பிஎம்டபிள்யூ காரை வாங்கி தருவதாக, மாணவரின் தந்தையான ஷம்சுதீன் மித்யா கூறியுள்ளார்.

இதையடுத்து அரையாண்டு தேர்வுகளில் மாணவர் சிறந்த மதிப்பெண் எடுத்ததை தொடர்ந்து, தனது மகன் ஆசைப்பட்ட காரை வாங்கி தர அவரது தந்தை முடிவு செய்தார்.

இதன்காரணமாக மேற்கு வங்கத்தில் இருந்து மும்பைக்கு பயணம் செய்த மாணவரின் தந்தை, அந்தேரி பகுதியில் உள்ள ஒரு பிஎம்டபிள்யூ ஷோரூமில் குறிப்பிட்ட காரை வாங்கினார்.

இதையடுத்து தனது மகனுக்காக வாங்கப்பட்ட காரை மும்பையில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள தனது கிராமத்திற்கு கொண்டு வருவதற்காக, ஒரு சரக்கு லாரி ஒன்றை வாடகைக்கு எடுத்தார்.

பின்னர் இந்த பிரத்யேக பிஎம்டபிள்யூ எம்4 காம்பெடிஷன் காரை நவம்பர் 6 அன்று தனது மகனுக்கு பரிசாக, அவரது தந்தை ஷம்சுதீன் வழங்கினார்.

ஒன்பதாம் வகுப்பு மாணவருக்கு, அரையாண்டு தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்ததற்காக பிஎம்டபிள்யூ காரை மாணவரின் தந்தை பரிசாக வழங்கியது இணையத்தில் வைரலாகியுள்ளது.

பயனர்கள் பதிவு

இதுகுறித்து பயனர்கள் வெளியிட்ட பதிவில், இவ்வளவு விலை உயர்ந்த காரை பதினாறு வயது சிறுவனுக்கு பரிசளித்தது சரியானதாக இல்லை என்று கூறினர்.

மேலும் பல இடங்களில் மாணவர்கள் கார்களை பொறுப்பின்றி இயக்கி, சாலை விபத்துகளை ஏற்படுத்தி பல அப்பாவி மக்களின் உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் பதிவிட்டனர்.

ஒரு வாகனத்தை இயக்குவதற்கு குறைந்தபட்சம் பதினெட்டு வயது பூர்த்தி செய்யவேண்டியதாக விதிகள் உள்ளபோது, இந்த மாணவர் எவ்வாறு காரை இயக்குவார் எனவும் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

X