

மத்தியப் பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து லட்சக்கணக்கில் மோசடி செய்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும் சுற்றுலாத் துறையின் கூடுதல் இயக்குநர் என்றும் பொய் கூறி திருப்தி சிங் ராஜ்புத் என்ற 30 வயது பெண் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சமீபத்தில் சிவப்பு நிறப் புடவைகளில் மூன்று பெண்கள் தோன்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் இருவர் திருப்தி சிங்.
அந்த வீடியோவில், "நாங்கள் மத்தியப் பிரதேச சட்டசபை வளாகத்தில் இருக்கிறோம். எங்கள் சேட்டைகளைப் பார்த்தால் நாங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று யாருக்கும் தெரியாது" என்று கூறிச் சிரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
போபால் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த வீடியோ சட்டசபையில் எடுக்கப்படவில்லை என்றும், அது மானுடவியல் அருங்காட்சியக வளாகம் ஒன்றில் படமாக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.
வீடியோவில் இடம்பெற்ற மற்ற இரு பெண்களிடம் விசாரித்தபோது, சிவப்புச் சேலை அணிந்த திருப்தி சிங் ராஜ்புத் தான் தங்களை ஐஏஎஸ் அதிகாரிகள் போல நடிக்கச் சொன்னதாக தெரிவித்தனர்.
தங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக்குவதாக நம்ப வைத்து, தலா ரூ. 3 லட்சம் வரை திருப்தி சிங் வாங்கியதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
சுற்றுலாத் துறை சொத்துகளை குத்தகைக்கு விடுவதாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி பலரிடம் திருப்தி சிங் ராஜ்புத் பணம் பறித்து தெரியவந்தது.
திருப்தி மீது அசோக் நகர் மற்றும் போபால் காவல் நிலையங்களில் 3 எப்.ஐ.ஆர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2025 ஏப்ரல் மாதம் சந்தேரியில் உள்ள அரசு ஹோட்டலில் தங்கி, 4 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9.80 லட்சம் மற்றும் ஒரிஜினல் ஆவணங்களை பெற்று ஏமாற்றியதுதான் இவருக்கு எதிராகப் பதிவான முதல் வழக்காகும்.
போபாலில் உள்ள திருப்தி சிங்கின் வீட்டில் காவல்துறை நடத்திய சோதனையில், அரசுத் துறைகளின் போலி அடையாள அட்டைகள், லெட்டர் ஹெட்கள், பணி நியமன ஆணைகள், கேடயங்கள், நினைவுப் பரிசுகள், இந்திய அரசு ன்ற வாசகம் பொறிக்கப்பட்ட டொயோட்டா இன்னோவா கார், போலி சி.பி.ஐ அடையாள அட்டை ஆகியவை சிக்கின.
திருப்தியுடன் சேர்த்து அவருக்கு உதவியாக இருந்த அவரது சகோதரர் சுதான்ஷு சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பிம்பத்தை நம்பியே திருப்தியை திருமணம் செய்து கொண்டதாக திருப்தியின் கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முன்பாகத் திருப்தி தனது மடிக்கணினியிலிருந்தபல ஆவணங்களை அழித்துள்ளதை போலிசார் கண்டறிந்துள்ளனர்.
திருப்திக்கு போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்த நபர்களைக் கண்டறிந்துள்ளதாகவும், இதில் வேறு யாரேனும் பின்னணியில் உள்ளனரா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.