

முகத்தில் கேக் பூசப்பட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், நண்பனை இளைஞர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ஜானுபூரில் அமைந்துள்ள லோயர் ரூப்நகர் பகுதியில் நேற்று இரவு சாலையோரத்தில் நீரஜ் என்ற 'அன்ஷு' தனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீரஜின் சகோதரர் ரிஷு, நண்பர்கள் பவன் நாயர் என்கிற சமீர், ஜான் சோத்ரா, கௌரவ் சிங் மற்றும் சுகந்த் பட்டி உள்ளிட்ட நண்பர்கள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீரஜ் கேக் வெட்டிக்கொண்டிருந்தபோது, பவன் நாயர் நீரஜின் முகத்தில் கேக்கை பூசினார். இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.
மற்ற நண்பர்கள் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றபோதிலும், கோபமடைந்த நீரஜ் கத்தியை எடுத்து பவன் நாயரின் கழுத்தை வெட்டினார்.
படுகாயமடைந்த பவன், உடனடியாக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக நீரஜ் மற்றும் அவரது சகோதரர் ரிஷுவை ஜெயின்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.