குண்டுவெடிப்பு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் போலியானது; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது: தெலுங்கானா டிஜிபி

இந்த மின்னஞ்சல் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
Telangana DGP
Published on: 

நகரின் சில இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று காவல்துறைக்கு வந்த மின்னஞ்சல் போலியானதாக தெரிகிறது என்று தெலுங்கானா டி.ஜி.பி. சி.வி. ஆனந்த் தெரிவித்தார். இருப்பினும், நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி நகரில் உள்ள நான்கு காவல் ஆணையரகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினர் சாலைகளில் இறங்கி வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக சந்தைகள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களிலும், தங்கும் விடுதிகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

"நாங்கள் ஏற்கனவே விசாரணை நடத்திவிட்டோம். இது போலியான மின்னஞ்சலாகவே தெரிகிறது. இத்தகைய போலி மிரட்டல்கள் அவ்வப்போது வருகின்றன. ஆனால், எங்களிடம் நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) உள்ளது. இதுபோன்ற போலி மிரட்டல்கள் வரும்போதெல்லாம், நாங்கள் அந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தீவிர விசாரணை:

இந்த மின்னஞ்சலை அனுப்பியது யார் என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார். ஐதராபாத் காவல் ஆணையர் மகேஷ் பகவத் கூறுகையில், இந்த மின்னஞ்சல் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாசவேலை தடுப்பு சோதனைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து '112' என்ற எண்ணில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மின்னஞ்சலில் மிரட்டல்:

நவம்பர் 21-ஆம் தேதியன்று நகரின் சில இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று மின்னஞ்சல் வந்ததை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை முதல் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது. இந்த மின்னஞ்சல் போலியானதாக இருக்கலாம் என்று காவல்துறையினர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், அந்த மின்னஞ்சலில் மும்பையில் நடந்த 26/11 தாக்குதல் போன்ற தாக்குதல்களை நடத்தப்போவதாகவும், காச்சிகுடா ரெயில் நிலையம் மற்றும் அருகில் உள்ள ஒரு ஓட்டல் ஆகியவை இலக்குகளாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

X