

கேரளத்தில் யானை தந்தம் கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த யானை தந்தம் கடத்தும் கும்பல், தந்தங்களை விற்கவும், விற்பனையாளர்களை சந்திக்கவும் வயநாட்டில் உள்ள ஒரு விடுதிக்கு வர இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கேரளம் வனத்துறையின் வனப் புலனாய்வு பிரிவு ரகசிய விசாரணையில் இறங்கியது. அவர்கள் வயநாட்டில் உள்ள குறிப்பிட்ட விடுதியை கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த கார் மற்றும் அதில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், காரை சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜோடி யானை தந்தங்கள் மற்றும் ஒரு தந்த துண்டு இருப்பது தெரியவந்தது. அவற்றை காருடன் பறிமுதல் செய்த வனத்துறையினர், காரில் வந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வடக்கநாடு பனையம்பத்து ஷமின் பிரான்சிஸ் (வயது 32) மற்றும் செத்தாலயம் ஆறாம் மைல் வெட்டுபர புரத் அபிலாஷ் (44) என தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் அவர்களுக்கு தந்தங்களை வழங்கியது குரிச்சியாடு ராஜேஷ் (34), பாலன் (55) மற்றும் பனயம்பத்து ஜித்து (27) என தெரியவந்தது. அவர்களையும் நேற்று இரவு வனத்துறையினர் கைது செய்தனர். கைதான 5 பேரும் வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் ஒரு பெரிய வனவிலங்கு கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா? அவர்களுக்கு தந்தங்களை வழங்கியது யார்? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.