

இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR-ல் குளறுபடி நடைபெற்றதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
தற்போது டெல்லியில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றம் போடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விசாரணை இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த பெஞ்சில் ஜாய்மாலா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகிய இரண்டு நீதிபதிகளும் உள்ளனர்.
விசாரணையின்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், "படிவங்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவை பரிந்துரைக்கப்பட்ட வடிவங்கள் ஆகும். அவற்றை மாற்ற முடியாது. வாக்காளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் வெறுமன காத்திருக்கக் கூடாது. மாறாக அவர்களையே நேரடியாகச் சென்றடைய முயற்சிக்க வேண்டும்" என்றார்.
படிவம்-6 மற்றும் படிவம்-8 ஆகியவற்றின் மூலம் விண்ணப்பங்களைப் பெறும் நடைமுறையைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் "மிக எளிமையான தீர்வை பின்பற்றுங்கள்" என்று வலியுறுத்தினார்.
மற்ற இரண்டு நீதிபதிகள் "டெல்லியில் எந்தத் தேர்தலும் நடைபெறவிருக்காத நிலையில், அக்டோபர் 30-ம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயிக்குமாறு ஆணையம் ஏன் வலியுறுத்துகிறது. பெயர்களை மீண்டும் பதிவு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்காதீர்கள்.
பல்வேறு காரணங்களால் தங்கள் கணக்கெடுப்புப் படிவங்களைச் சமர்ப்பிக்க முடியாத வாக்காளர்களுக்கு, எளிமையான தீர்வு ஒன்றைக் கண்டறியுங்கள். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்த ஒருவர், தற்போது அந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்றால், அவரை ஒரு புதிய வாக்காளர் என்று வகைப்படுத்துவதற்கு பதிலாக, அவரது சூழலுக்கு ஏற்றவாறு ஒரு தீர்வை உருவாக்க வேண்டும் என்றும் பெஞ்ச் வலியுறுத்தியுள்ளது.