

கேரள மாநிலம் கொச்சியில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி, 55 வயது முதியவர் உயிரிழந்த வழக்கில், சிறுவனின் தந்தையான கூடுதல் மாவட்ட நீதிபதியை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
திருச்சூர் மாவட்டம், இரிஞ்ஞாலக்குடா மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தின கூடுதல் மாவட்ட நீதிபதியான, குற்றவாளியின் தந்தை தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி கௌசர் எடப்பாகத் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
“மனுதாரர் ஒரு நீதித்துறை அதிகாரி, அவர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பார். அவரிடம் ஏற்கனவே 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனவே அவரை காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையில்லை.
மறு உத்தரவு வரும்வரை காவல்துறையினர் மனுதாரரைக் கைது செய்யக்கூடாது. மனுதாரர் தேவைப்படும்போது விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். மனுதாரரிடம் நடத்தப்படும் விசாரணையானது, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இறந்த முதியவரின் பிள்ளைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனுவை எதிர்த்து வாதிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.25) அதிகாலை, கொச்சி சேரநல்லூர் பகுதியில் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் ஒன்று ஸ்கூட்டரின் பின்புறமாக மோதியதில் ஜெயபாலகிருஷ்ணன் (55) என்ற உணவக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டியது திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலக்குடா மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதியான ரினோ பிரான்சிஸ் சேவியரின் 17 வயது மகன் என்பது தெரியவந்தது. அந்த கார் நீதிபதியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 199-ஏ (minor driving liability) கீழ், சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் அதற்கு அவர்களது பாதுகாவலர் அல்லது வாகனத்தின் உரிமையாளரே பொறுப்பு என்ற விதியின் கீழ் நீதிபதி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதனைத்தொடர்ந்து முன்ஜாமின் கோரி இந்த நீதிபதி தாக்கல் செய்த மனுவில், தனது மகன் கார் எடுத்துச் சென்றது தனக்கு தெரியாது என்றும், தான் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதன்பின்னரே விபத்து குறித்து தனக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.