

எத்தனால் கலந்த E20 பெட்ரோல் கொள்கையை எதிர்த்து பிரதமர் இல்லம் நோக்கி ஆகஸ்ட் 4இல் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளார் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.
E20 பெட்ரோலை பயன்படுத்த வேண்டும் என மக்கள் மீதான திணிப்பை எதிர்த்து ஆம் ஆத்மி ஒருங்கிணைத்த மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் அருகே நடந்தது.
இதில் உரையாற்றிய கெஜ்ரிவால், " E20 கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமருக்கு அனுப்ப மனுவில் கையெழுத்திடுமாறு ஏற்கனவே கோரியிருந்தேன்.
2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இணையவழியில் கையெழுத்திட்டுள்ளனர். அதன் அச்சு பிரதிகளை எடுத்துள்ளேன். வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) மதியம் 12:00 மணிக்கு, பிரதமர் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று இந்த மனுவை வழங்க உள்ளேன்."
இப்போராட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் தேவையில்லை. காவல்துறையின் தடிஅடிக்கு அஞ்சாத, சிறை செல்லத் தயங்காத 100 தொண்டர்களை மட்டுமே என்னுடன் அழைத்துச் செல்ல உள்ளேன்." என தெரிவித்துள்ளார்.
E20 பெட்ரோல் திட்டத்திற்கு எதிரான இப்போராட்டத்தில் மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
பெட்ரோல் பங்குகளில் E20 பெட்ரோல் அல்லது எத்தனால் கலக்கப்படாத சுத்தமான பெட்ரோல் ஆகிய இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும். E20 கலப்பு பெட்ரோலின் விலையைசுத்தமான பெட்ரோலை விடக் குறைவாக நிர்ணயிக்க வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த பெட்ரோல் விலையையும் லிட்டருக்கு ரூ. 84க்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே ஆம் ஆத்மியின் கோரிக்கைகள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, "ஒரு அமைச்சகம் E20 நல்லது என்கிறது, மற்றொரு அமைச்சகம் பாதிப்பு என்கிறது. முறையான ஆய்வுகள் இல்லாமல் வாகனங்கள் பழுதடைவதையும், மைலேஜ் குறைவதையும் அரசு மறைக்கிறது" எனவும் அவர் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, E20 பெட்ரோல் குறித்த புகார்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் சோதனை ஓட்டங்களுக்குப் பிறகே E20 எரிபொருள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது 20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 3 கோடிக்கும் அதிகமான கார்களும் எத்தனால் கலந்த பெட்ரோலில் எவ்வித முறையான இயந்திரப் பழுதுகளுமின்றி இயங்கி வருகின்றன.
E20 பெட்ரோலால் வாகனங்களின் என்ஜின்கள் பரவலாகப் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு நிரூபிக்கப்பட்ட ஆதாரமும் இல்லை என்று அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.