

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள E20 (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) எரிபொருள் கொள்கைக்கு எதிராக வாகன உரிமையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் தொடர் சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முக்கிய விளக்கமளித்துள்ளது.
அதில், மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் போர் உச்சத்தில் இருந்தபோது E20 கொள்கை அமலில் இல்லாதிருந்தால், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 வரை உயர்ந்து பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் என்று அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் 2023-க்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் பலர், E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகவும், எஞ்சின் பராமரிப்புச் செலவு அதிகரிப்பதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சிகளும் இக்கொள்கைக்கு எதிராகப் போராடி வருகின்றன. இந்த சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், ஒரே வாரத்தில் 4-வது முறையாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை வெளியீட்டுத் தரவுகளுடன் விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியபோது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றிற்கு $135 (சுமார் ரூ.13,000) ஆக உயர்ந்தது. எத்தனால் கலப்பு இல்லாதிருந்தால் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125-ஐத் தொட்டிருக்கும். ஆனால், 20% எத்தனால் கலக்கப்பட்டதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.77 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டு, நுகர்வோருக்கு லிட்டருக்கு ரூ.30 வரை சேமிப்பு கிடைத்தது.
எத்தனால் பயன்பாட்டால் மைலேஜ் சற்று குறைவதை ஒப்புக் கொண்ட மத்திய அரசு, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், சர்வதேசச் சந்தை விலையேற்றத்திலிருந்து நுகர்வோரைக் காக்கவும் இக்கொள்கை மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85% இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் சூழலில், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை 20% கலப்பது நாட்டின் அந்நியச் செலாவணியையும் பெருமளவில் சேமிக்கிறது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. வாகன உரிமையாளர்களின் புகார்களுக்கு மத்தியில், சர்வதேசப் பொருளாதாரப் பாதுகாப்பைக் காரணம் காட்டி E20 கொள்கையை மத்திய அரசு தீவிரமாக நியாயப்படுத்தி வருகிறது.