

வடகிழக்கு பருவமழையின் காரணமாக கால்வாய் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல ஆறுகளில் மழைநீர் கலங்கலாக ஓடிவருகிறது. ஆனால் குங்குமத்தை கரைத்து விட்டது போன்று ரத்தச் சிவப்பாக முழு தண்ணீரும் கால்வாய் முழுவதும் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியக் கால்வாயில் தான் இந்த மாற்றம் திடீரென நிகழ்ந்து மக்களையும் அதிகாரிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பேராம்பரா பகுதியில் மரக்காடிதோடு கால்வாய் ஓடுகிறது. இந்தக் கால்வாய் அந்தப் பகுதி மக்கள் குளிக்கவும், உடைகளை துவைக்கவும் பயன்பட்டு வருகிறது. மேலும் இந்தக் கால்வாய் மூலம் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பத்தன்று கால்வாய் பகுதிக்கு சென்றவர்கள், அங்கு ஓடிய தண்ணீரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு காரணம் ரத்தச் சிவப்பாக தண்ணீர் சென்றது தான். வழக்கமாக தெளிவான நீரோட்டத்துடன் காணப்படும் தண்ணீர், குங்குமத்தை கரைத்து விட்டது போன்று கால்வாய் முழுவதும் சென்றது. இந்த தகவல் காட்டுத்தீயாக சுற்று வட்டாரத்தில் பரவ ஏராளமானோர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். அடர்ந்த சிவப்பு நிறமாக ஓடிய தண்ணீரை கண்டு அவர்கள் அச்சம் அடைந்தனர்.
இதற்கிடையில் தகவல் அறிந்ததும், உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் ஆய்வு நடத்தினர். அவர்கள், நீரின் தன்மையை கண்டறிய ஆய்விற்காக உடனடியாக நீர் மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் அதனை அறிவியல் பரிசோதனைக்காக அரசு அங்கீகாரம் பெற்ற மைய ஆய்வகத்திற்கு அனுப்பினர்.
மேலும், “கால்வாய் நீரில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா அல்லது பாசிப் பெருக்கம் போன்ற இயற்கை காரணங்களால் இந்த நிறமாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது ஆய்வக பரிசோதனைக்கு பிறகே முழுமையாக தெரிய வரும். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை பொதுமக்கள் கால்வாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என்றும், கால்வாய் பகுதியில் எச்சரிக்கையாக இருக்கு மாறும் அறிவுறுத்தினர்.
இது தொடர்பாக மக்கள் கூறுகையில், நீரின் திடீர் நிறமாற்றம் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த பிரச்சனையால் நிலத்தடி நீர் மற்றும் அருகில் உள்ள கிணறுகளின் நீர் மாசுபடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அருகில் உள்ள தொழிற்சாலைகள் அல்லது சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் சட்ட விரோதமாக கால்வாயில் திறந்து விடப்பட்டிருக்கலாம் அல்லது ரசாயனங்கள் ஏதேனும் கலக்கப்பட்டிருக்கலாம் என்றனர்.
சம்பவம் குறித்து போலீசாரும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.