

மண்டி தொகுதிக்கான 11 கோடி ரூபாய் நிதியில் 50 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் செயல்பாட்டு அறிக்கை கோரியுள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதி பாஜக எம்பி கங்கனா ரணாவத், தனது தொகுதிக்கான மேம்பாட்டு நிதி முறையாகப் பயன்படுத்தப்படாதது குறித்து அரசு அதிகாரிகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். மண்டி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
கூட்டத்தின் போது தொகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த கங்கனா ரணாவத், தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் 11 கோடி ரூபாய் வரை கைவசம் உள்ளது என்றும், ஆனால் அதில் வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். பெரும்பாலான நிதி பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.
முந்தைய கூட்டங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் முடிந்துவிட்டதாகவும், எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அதிகாரிகள் தன்னிடம் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக அவர் குற்றம்சாட்டினார். "ஒவ்வொரு திஷா கூட்டத்திலும் என்னிடம் இதுபோன்ற போலி வாக்குறுதிகளை அளிக்காதீர்கள், இனி எனக்கு உண்மையான வேலைகளும் வெளிப்படையான செயல்பாடுகளுமே தேவை" என்று கோபத்துடன் குறிப்பிட்டார்.
தொகுதி நிதியை விரைவாகப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள வளர்ச்சிப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிதிச் செலவினங்கள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்த முழுமையான செயல்பாட்டு அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்குக் கெடு விதித்துள்ளார். இக்கூட்டத்தில் கங்கனா ரணாவத் அதிகாரிகளைக் கடிந்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.