கணவன் மனைவியுடன் கட்டாய உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமா? - உச்சநீதிமன்றம் சொன்னது இதுதான்

இந்த வழக்கு வெறும் சமூக ஒழுக்கம் சார்ந்த விஷயம் அல்ல
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on
Summary

கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே என்றும் ஆனால் அதை குற்றமாக கருத சட்டத்தில் இடமில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பழைய இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 மற்றும் தற்போதைய பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ், திருமணத்திற்குப் பிந்தைய கட்டாய பாலியல் உறவு குற்றமாகப் கருதப்படுவதில்லை.

இந்நிலையில் வழக்கு ஒன்றில் கர்நாடக உயர் நீதிமன்றம், மனைவியைப் பாலியல் அடிமை போல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடர அனுமதி அளித்து தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றம்

இந்தத் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இதன்போது, "நாங்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோம். கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே.

ஆனால், பிரிவு 375ன் கீழ் நேரடியாக திருமணத்துக்கு பிந்தைய கட்டாய உறவு பாலியல் வன்கொடுமை ஆகாது என விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் போது ஒரு நபரை இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகச் சேர்த்து விசாரணை நடத்துவது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறதா?

நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தில், குறிப்பிட்ட செயல் குற்றமல்ல என்று நேரடியாகக் கூறப்பட்டுள்ள போது, அதை நீதிமன்றங்கள் தனது நீதித்துறை மறுஆய்வு மூலம் குற்றமாக்க முடியுமா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பாதிக்கப்பட்ட மனைவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ஒரு பெண் பாலியல் அடிமையாக நடத்தப்படும் அதீத சூழலில் இந்த முடிவை உயர் நீதிமன்றம் எடுத்ததாக சுட்டிக்காட்டினார்.

மூத்த வழக்கறிஞர் கருணா நந்தி கூறுகையில், அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு ஏற்ப இந்தச் சட்ட விலக்கை மறுவாசிப்பு செய்யவோ அல்லது மாற்றி விளக்கவோ நீதிமன்றம் முன்வர வேண்டும் என்றார்.

முடிவெடுக்க வேண்டியது மக்கள் தான்

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "இந்த வழக்கு வெறும் சமூக ஒழுக்கம் சார்ந்த விஷயம் அல்ல; மாறாக இது முழுக்க முழுக்க அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த பிரச்சனை.

சமூக ஒழுக்கம் என்றால் என்ன? மக்கள் தங்கள் பிரதிநிதிகள் (நாடாளுமன்றம்) மூலம் பேசுவதை, நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் பரிசோதிக்கிறோம்.

முடிவெடுக்க வேண்டியது மக்கள் தான். நீதிமன்றம் தனது அரசியலமைப்பு மொழியில் மட்டுமே பேச முடியும்." என தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com