பிறந்த இடத்தைத் தெளிவுபடுத்தும் வரை சௌரவ் தாஸ் பாஸ்போர்ட்டை பயன்படுத்த வேண்டாம் - மத்திய அரசு

திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு விளக்கம் கேட்டு தாஸுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
பிறந்த இடத்தைத் தெளிவுபடுத்தும் வரை சௌரஸ் தாஸ் பாஸ்போர்ட்டை பயன்படுத்த வேண்டாம் - மத்திய அரசு
Published on: 

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ், தனது பாஸ்போர்ட்டில் உள்ள பிறந்த இடம் குறித்த முரண்பாடுகளுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கும் வரை அதனைப் பயன்படுத்த வேண்டாம் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பத்தின்போது உண்மைத் தகவல்கள் மறைக்கப்பட்டிருப்பது அல்லது முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது வழக்கமான நடைமுறைதான் என சௌரஸ் தாஸின் குற்றச்சாட்டிற்கு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார்.

நோட்டீஸ்

சட்ட அமலாக்கத் துறையினரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நவம்பர் 23 அன்று சௌரவ் தாஸுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், அவரது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த இடம் குறித்து தெளிவுபடுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8, 2019 தேதியிட்ட விண்ணப்பத்தில் “வழங்கப்பட்ட விவரங்கள் (பிறந்த இடம்) தவறானவை” என்றும், ஆகஸ்ட் 21, 2019 அன்று வழங்கப்பட்ட கடவுச்சீட்டு “முக்கியமான உண்மைகளை மறைத்து பெறப்பட்டது” என்றும் அலுவலகத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த இடம் மற்றும் ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள் குறித்து 7 நாட்களுக்குள் (நவம்பர் 30-க்குள்) உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

“உங்கள் பிறந்த இடம் குறித்த பொருத்தமான விளக்கத்தை, துணை ஆவணங்களுடன் ஏழு நாட்களுக்குள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். திருப்திகரமான பதிலை அளிக்கத் தவறினால் அல்லது பதில் அளிக்கப்படாவிட்டால், 1967 ஆம் ஆண்டு கடவுச்சீட்டுச் சட்டத்தின் பிரிவு 10(3)(b)-இன் கீழ் உங்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பறிமுதல் செய்யப்படலாம்.

பதில் சமர்ப்பிக்கப்படும் வரை இந்தக் கடவுச்சீட்டைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள்,” என கூறப்பட்டுள்ளது.

விளக்கத்தின் பின்னணி

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லவிருந்த சௌரவ் தாஸ், டெல்லி விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தனது குரலை ஒடுக்கவே மத்திய அரசு இவ்வாறு செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், பயணத் தடையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

செப்டம்பர் 30 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

எதற்காக தடுத்து நிறுத்தப்பட்டார்?

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர். கணேஷ் குமார் என்பவர், சௌரவ் தாஸின் பின்னணி மற்றும் இந்தியக் குடியுரிமை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தக் கோரி பொதுநல மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சௌரவ் தாஸ் இந்தியக் குடிமகன் இல்லை எனத் தெரியவந்தால், அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையை ரத்து செய்ய வேண்டும் எனவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி அவரது சமூக வலைதளக் கணக்குகளை முடக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் சௌரவ் தாஸ் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையிலேயே சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அவரது ஆவணங்களை மறுசரிபார்ப்பு செய்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சௌரஸ் தாஸின் வாதம்

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தாஸ், விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னரே தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மின்னஞ்சலைப் பார்த்ததாகக் கூறினார்.

“விளக்கம் அளிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அதிகாலை 1 மணிக்குத் திட்டமிடப்பட்டிருந்த எனது விமானப் பயணத்திற்கு ஐந்து மணி நேரத்திற்கு முன்புதான் எனக்கு விளக்கம் கோரும் அறிவிப்பு கிடைத்தது.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுவதற்கு முன்பு நான் அதைப் பார்க்கவில்லை. எனது தரவுகளில் முரண்பாடு இருப்பதாக ஒரு தகவல் வந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு தகவலின் அடிப்படையில், அதன் விவரங்கள் எதையும் வெளியிடாமல் ஒரு குடிமகனைப் பயணிக்க விடாமல் தடுக்க முடியுமா?”

“2019 முதல் நான் இரண்டு முறை வெளிநாடுகளுக்கு எந்தத் தடையுமின்றி பயணம் செய்துள்ளேன். நான் சி.ஜே.பி. இயக்கத்துடன் தொடர்புடையவன் என்பதால் இந்த முறை இந்தப் பிரச்சினை எழுப்பப்படுகிறது. நான் பிறந்த இடமும், என் பெற்றோரும் இதில் இழுக்கப்படுகிறார்கள். ஆனால், இதுபோன்ற மலிவான அரசியலுக்கு நாங்கள் அஞ்சவில்லை” என தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட்டில் என்ன தவறு?

சௌரவ் தாஸின் பாஸ்போர்ட்டில் அவர் பிறந்த இடம் 'சென்னை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் உண்மையில் டெல்லியில் பிறந்தவர் என்றும், அவரது பாஸ்போர்ட்டில் 'சென்னை' எனத் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதே இந்தச் சர்ச்சைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

X