

மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று முதல் 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. அதாவது ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சபரிமலையில் ஐயப்பனை தரிசித்து வருகிறார்கள். சீசனின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அதன்படி நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
பின்னர் இரு முடி கட்டுகளுடன் காத்திருந்த பக்தர்கள் 18-ம் படி வழியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. கார்த்திகை 1-ந் தேதியான இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது.
சீசன் தொடக்கமான இன்று முதல் தினமும் 18 மணி நேரம் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும் சூழ்நிலை உருவானால், தரிசன நேரம் அதிகரிக்கப்படலாம்.
ஆன்லைன் முன்பதிவு மூலம் 66 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு மூலம் 14 ஆயிரம் பேரும் என மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் தினமும் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த சீசனுக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 22-ந்தேதி வரை (நவம்பர் மாதம்) ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்து விட்டது.
இதற்கிடையே மண்டல சீசனுக்காக நேற்று மாலையில் நடை திறக்கப்பட்ட முதல் நாளில் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டல சீசனின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை அடுத்த மாதம் 27-ந் தேதியும். மகரவிளக்கின் முத்தாய்ப்பாக மகரஜோதி தரிசனம் ஜனவரி 14-ந் தேதியும் நடைபெறும்.
சீசன் காலத்தில் ஆன்லைன் தரிசன முன்பதிவு செய்து வரும் ஐயப்ப பக்தர்கள் விபத்து மூலம் மரணம் அடைந்தால், விபத்து காப்பீடாக பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.