மோடியை அதிகாரத்திலிருந்து அகற்றினால் மட்டுமே நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் - கார்கே

ராம்லீலா மைதானம் ஒரு புதிய இதிகாசத்தை எழுதி வருகிறது
கார்கே, மோடி
Published on: 
Summary

மோடியும் அமித் ஷாவும் ஞானேஷ் குமாரை எங்கு ஒளித்து வைத்தாலும் வெளியே இழுத்துவரப்படுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இன்று பேரணியை நடத்தியது.

ராம் லீலா மைதானம் நோக்கி தலைவர்கள் பேரணி சென்று அங்கு உரையாற்றினர்.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, சஞ்சய் ராவத், சுப்ரியா சுலே, முதலமைச்சர்கள் வி.டி. சதீசன், ரேவந்த் ரெட்டி, டி.கே. சிவகுமார் மற்றும் பிற தலைவர்களும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

கார்கே பேச்சு

இந்த நிகழ்வில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே,

"நாங்கள் ஞானேஷ் குமாரை விரட்டியடிப்போம். அவர் போகும் வரை நாங்கள் போராடிக்கொண்டே இருப்போம். மோடியும் ஷாவும் அவரை மறைத்து வைக்க கடுமையாக முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் அவரை மறைக்க முடியாது. அவர் தலைமறைவானாலும், வெளியே இழுத்துவரப்படுவார். நமது இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதற்கான ஆற்றல் இருக்கிறது.

இளைஞர்கள், பெண்கள் மற்றும் தலித்துகள் என மக்களின் ஜனநாயக உரிமைகளையும் வாக்குகளையும் பறிக்க முயற்சிக்கும் பாஜக அரசை அதிகாரத்திலிருந்து அகற்றினால் மட்டுமே நாட்டில் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க முடியும்.

நாட்டு மக்கள் மோடியைத் தேர்ந்தெடுப்பதில்லை, மாறாக தனக்கு வாக்களிக்க வேண்டிய வாக்காளர்களை மோடியே தேர்ந்தெடுக்கிறார். மோடியை அகற்றி ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.

தற்போதைய மத்திய அரசும், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநில அரசுகளும் திருடர்களின் அரசுகளாகும். மக்கள் அத்தகையவர்களை அதிகாரத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும்.

அரசியலமைப்பையும் நாட்டையும் பாதுகாக்க மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்." என அழைப்பு விடுத்தார்.

பிற தலைவர்கள் பேச்சு

இந்த நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, ஞானேஷ் குமார் சிறைக்கு செல்வார் என்றும் மோடியும் அமித்ஷாவும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் பாஜக வாக்குகளை திருடி வெற்றி பெற்றதாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறினார்.

மேலும், மேற்கு வங்கத்தில் நடந்தது போன்ற வாக்குத் திருட்டு நாட்டில் அனுமதிக்கப்படாது என்றும் மம்தா கூறினார்.

ராமர் கோவிலை கொள்ளையடித்த பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். மேலும், ராம்லீலா மைதானம் ஒரு புதிய இதிகாசத்தை எழுதி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சகுனிகள் தவறான ஆட்டங்களை ஆடும்போது மகாபாரதப் போரை நடத்த வேண்டும். ஞானேஷ் குமாரை விசாரித்து சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

X