

தொகுதி மறுவரையறை மசோதா திருத்தம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவை கடந்த ஏப்ரல் 16 அன்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்-ஆல் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவானது மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-லிருந்து 850 ஆக உயர்த்தவும், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கவும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதையடுத்து மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு, மொத்தமுள்ள 528 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 298 பேர் ஆதரவாகவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
இதைத்தொடர்ந்து பெரும்பான்மைக்கு 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், பெரும்பான்மை கிடைக்காமல் மசோதா திரும்ப பெறப்பட்டது.
இந்த நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மீண்டும் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற உள்ளது.
அதன்படி தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்கள் முழுவதும் மக்களவை இடங்கள் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மாநிலங்களுக்கு இடையேயான விகிதாச்சார முடக்கத்தை 25 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்தின் விகிதாச்சார பங்கை தீர்மானிக்க 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடர்ந்து பயன்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மாநிலங்களுக்கு இடையேயான இட விகிதங்களை மாற்றுவதற்கு பதிலாக, ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்ய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை பின்பற்ற உள்ளதாகவும் தகவல் வெலியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாவிற்கு தவெக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மேலும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியுள்ள சூழலில், தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவிற்கு திமுகவின் 22 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 8 மாநிலங்களவை உறுப்பினர்களின் வாக்குகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.