

டெல்லியில் உள்ள 64 குண்டான நாய்கள் பங்கேற்கும் ஒரு வித்தியாசமான போட்டி சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. டெல்லியின் மிகக் குண்டான நாய் எது என்பதைத் தீர்மானிக்க சமூக வலைத்தளப் பயனர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
‘ஃபேட் டாக்ஸ் ஆஃப் டெல்லி’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி, தற்போது ஒரு தேர்தல் பிரச்சாரக் களம் போல மாறியுள்ளது.
பிரபல சர்வதேச திருவிழாவான 'ஃபேட் பியர் வீக்' குண்டான கரடிகள் வாரம் நிகழ்வை உத்வேகமாகக் கொண்டு இப்போட்டி உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 29 வரை இந்த ஆன்லைன் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இப்போட்டியில் கலந்துகொள்ள டெல்லி முழுவதிலும் இருந்து நாய்களின் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணியின் புகைப்படம், பெயர் மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதி ஆகிய விவரங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட 64 நாய்கள் பல சுற்றுகளாக ஒன்றோடொன்று மோதி வருகின்றன. இறுதியில் ஒரே ஒரு நாய் மட்டுமே டெல்லியின் மிகக் குண்டான நாயாக மகுடம் சூடவுள்ளது.
இப்போட்டியில் குட்டா சிங் , மஹாகுட்டேஷ்வர், கஜிந்தர் , கோகோ, கூகூ , மான்டி , பியர் மற்றும் லைலா போன்ற சுவாரசியமான பெயர்களைக் கொண்ட நாய்கள் களம் இறங்கியுள்ளன. இதில் 'செவ்பாக்கா ரசா சிங்' என்ற நாயும் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாய்களின் உரிமையாளர்களும் ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்த நாய்களுக்காகப் போஸ்டர்கள் அடித்து, சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக, 'குட்டா சிங்' என்ற நாய்க்கு ஆதரவு அலை அதிகமாக உள்ளது.
பிரபல விரைவு விநியோக நிறுவனமான 'பிளின்கிட்' இந்த சுவாரசியமான போட்டியில் இணைந்து, தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளது. "ரோகினியைச் சேர்ந்த குட்டா சிங்கிற்கு எங்களது முழு ஆதரவு" என்று அந்த நாய் படத்தைப் பகிர்ந்து பிளின்கிட் பதிவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, போட்டியில் வெற்றி பெறும் நாய்க்கு இலவச நாய் தீவனங்கள் மற்றும் தின்பண்டங்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் வெற்றி பெறும் நாய்க்குப் பட்டத்துடன் சேர்த்துப் பரிசுகளும் வழங்கவுள்ளன.
இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் மூலம் மதிய நேரத்தில் இந்த வாக்கெடுப்புகள் தொடங்கப்பட்டு, 24 மணி நேரம் நேரலையில் இருக்கும். இந்த வினோதமான போட்டியைக் கண்டு நெட்டிசன்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
"அனைத்து நாய்களுமே அழகாக இருப்பதால் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் அழுகையே வருகிறது" என்றும், "இதற்காக எனது போலி கணக்குகளைப் பயன்படுத்திக் கூட வாக்களிப்பேன்" என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செப்டம்பர் 29 அன்று நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியை நோக்கி இந்த எலிமினேஷன் சுற்றுகள் நகர்வதால், டெல்லி நாய் பிரியர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.