

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பாண்டுக்கான டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தில், சங்கத் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தலைவர் பதவியை ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் ஏபிவிபி மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பரபரப்பான 17 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ரிசல்ட் வெளியாகி உள்ளது.
ஏபிவிபி சார்பில் நிறுத்தப்பட்ட அதன் வேட்பாளரான யாஷ் டபாஸ் தலைவர் பதவியைக் கைப்பற்றி உள்ளார்.
எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் மாணவர் அணியான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) வேட்பாளர் விஜய் மீனா 19,651 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் யாஷ் டபாஸ் 20,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
துணைத் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட தீபான்சு வெற்றி பெற்றுள்ளார்.
செயலாளர் பதவிக்கு ஏபிவிபி வேட்பாளர் ரியா சாவ்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இணைச் செயலாளர் பதவிக்கு ஏபிவிபியின் வேட்பாளர் லக்ஷயா ராஜ் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த வெற்றியினை ஏபிவிபியினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த ஆண்டும் தலைவர், செயலாளர், துணை செயலாளர் பதவிகளை ஏபிவிபி கைப்பற்றியிருந்தது குறிப்பிடதக்கது.