தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி - பெல்லட் குண்டு தாக்குதலுக்கு வழக்குப்பதிவு செய்தது டெல்லி காவல்துறை!

ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களின் பெயரை குறிப்பிடாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி - பெல்லட் குண்டு தாக்குதலுக்கு வழக்குப்பதிவு செய்தது டெல்லி காவல்துறை!
Published on

டெல்லி ஜாந்தர் மந்தர் பகுதியில் நடந்த மாணவர் போராட்டத்தின் போது, காவல்துறையினரால் தாக்கப்பட்டு பெல்லட் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சாஹில் லோச்சப் என்ற 19 வயது இளைஞரின் புகாரை ஏற்று டெல்லி காவல்துறை முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களின் பெயரை குறிப்பிடாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்திய போலீசார்மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, இன்று டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தின் முன்பாக பல மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

காவல்துறை முதலில் வழக்குப்பதிவு செய்ய மறுத்த நிலையில், ராகுல் காந்தியின் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அவர் தனது தர்ணாவை வாபஸ் பெற்றார்.

போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் ஒருபகுதியாக ஜூலை.20ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளன்று போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர்.

இந்த போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தியதோடல்லாமல், பெல்லட் ரக துப்பாக்கிகளையும் பயன்படுத்தினர். இதில் சாஹில் லோச்சப் என்ற 19 வயது மாணவனின் கண், தோள்பட்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் பல மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பான வீடியோக்களும் அப்போது வைரல் ஆனது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தநிலையில், காவல்துறை அதனை ஏற்க மறுத்துள்ளது.

இதனையறிந்த ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தாயாரை நேரில் அழைத்துக் கொண்டு நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்குச் சென்றார். அவருடன் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

காவல்துறை நடவடிக்கை

ராகுல் காந்தியின் போராட்டத்தைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை முறைப்படி வழக்குப்பதிவு செய்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட நகல் கிடைத்ததும், ராகுல் காந்தி தனது தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com