

பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட டெல்லி போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) செயல்முறையில் முறைகேடாக லட்சக்கணக்கான வாக்காளார்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த செயல்முறையை குழுவில் உள்ள 2 தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பை மீறி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேற்கொண்டதாக அண்மையில் வெளியான தகவல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சிஜேபி, காங்கிரஸ் மற்றும் மாணவர் அமைப்புகள் பாஜக தேர்தலில் வெற்றி பெற முறைகேடு செய்ததற்காக ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது.
அதேபோல கடந்த சனிக்கிழமை டெல்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் நேஹா போரா, உறுப்பினர் யோகேந்திரா யாதவ் மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் மத்தியில் இந்த போராட்டத்தில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த 3 பெண் பத்திரிகையாளர்கள் தாங்கள் டெல்லி காவல்துறை அதிகாரிகளால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் அளித்திருந்தனர்.
இஇதுபற்றி டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பெண் பத்திரிகையாளர் ஒருவர் கூறும்போது, பார்லிமெண்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு வெளியே பல மணிநேரம் அமர்ந்து இருந்தேன். எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வலியுறுத்தினேன். ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லை என்றார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக டெல்லி காவல்துறையும் தெரிவித்திருந்தது. இந்த சம்பவத்திற்கு இந்திய பிரஸ் கிளப் உள்ளிட்ட பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான 3 போலீசாரில் டெல்லி காவல் துறையின் உதவி ஆணையாளர் விவேக் பகத்தும் ஒருவர்.
இந்நிலையில், அவருக்கு கூடுதல் துணை ஆணையாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், இது தற்காலிக அடிப்படையில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றது.
மொத்தம் 12 அதிகாரிகளுக்கு இந்த தற்காலிக அடிப்படையிலான கூடுதல் டி.சி.பி. பதவிக்கான பணி வழங்கப்படுகிறது.
எனினும், முழு அதிகாரத்துடன் செயல்படுவதற்கான அங்கீகாரம் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. மத்திய உள்துறை அமைச்சகம், இந்த பதவிகளை நிரப்பிய பின்னர், இந்த தற்காலிக பதவிக்கலாம் முடிவடைந்து விடும்.
எனினும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.