காவல் நிலையத்திற்குள் காவலர்களை கத்தியால் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்திய நபரால் பரபரப்பு

காவல் நிலையத்திற்குள் நடந்த தாக்குதல், ஸ்கூட்டரை பறித்து சென்றது தொடர்பாக, காவல்துறை வழக்குகளை பதிவு செய்துள்ளது.
Nabeel
Published on: 

டெல்லியில் உள்ள காவல் நிலையத்திற்கு குடும்ப பிரச்சனை தொடர்பாக 'ஆலோசனை' பெறுவதற்காக அழைக்கப்பட்ட நபர் ஒருவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்த காவலர்களை தாக்கியுள்ளார். இதில் ஐந்து காவலர்கள் காயமடைந்தனர்.

பின்னர், அங்கிருந்த ஸ்கூட்டர் ஒன்றை பறித்துக்கொண்டு அவர் தப்பி சென்றார். தொடர்ந்து, தன்னை கைது செய்ய முயன்ற மற்றொரு காவல் குழுவினரையும் அவர் தாக்கினார்; இந்த மோதலின் போது மேலும் நான்கு காவலர்கள் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூடு:

ஜமா மஸ்ஜித் பகுதிக்கு உட்பட்ட கலா மஹால் பகுதியைச் சேர்ந்த நபீல் (30) என்பவரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர். சிட்லி கபர் பகுதியின் குறுகிய சந்துகளில், அவரை பிடிக்க முயன்ற காவலர் குழுவினர் மீது அவர் தாக்குதல் நடத்த முயன்றபோது, ​​அவரது கால்களில் துப்பாக்கியால் சுடப்பட்டது.

சுடப்பட்ட எட்டு குண்டுகளில் ஆறு குண்டுகள் அவரது இடுப்புக்குக் கீழே பட்டன. இதையடுத்து அவர் பிடிபட்டார். காயமடைந்த அவர், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவலர்கள் காயம்:

இந்த சம்பவத்தில் மொத்தம் ஒன்பது காவலர்கள் காயமடைந்தனர்; அவர்களில் இரண்டு உதவி ஆய்வாளர்களுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. காவல் நிலையத்திற்குள் நடந்த தாக்குதல், சிட்லி கபரில் நடந்த தாக்குதல் மற்றும் ஸ்கூட்டரை பறித்து சென்றது தொடர்பாக, காவல்துறை மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளது.

மத்திய மண்டல காவல் துணை ஆணையர் ரோஹித் ராஜ்பிர் சிங் கூறுகையில், நபீலின் தாயார் மற்றும் சகோதரி அளித்த புகாரின் பேரில், குடும்பப் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக அவர் ஜமா மஸ்ஜித் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் தங்களை துன்புறுத்துவதாக அவர்கள் புகார் அளித்திருந்தனர்.

X