டெல்லி உயர்நீதிமன்றத்தில் 7 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு

புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
Delhi High Court
Published on

டெல்லி, கர்நாடகா, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய நான்கு உயர் நீதிமன்றங்களுக்கு 14 புதிய நீதிபதிகளின் நியமனத்தை சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.

விசாரணை நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் இன்று (திங்கட்கிழமை) டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதவியேற்கிறார்கள். இதன்மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 50 ஆக உயரும்.

மாவட்ட நீதித்துறையில் நீதித்துறை அதிகாரிகளாக பணியாற்றி வந்த நிவேதிதா அனில் சர்மா, நிஷா சஹாய் சக்சேனா, சஞ்சய் சர்மா, பரத் பராஷர், அதிதி சௌத்ரி, தினேஷ் பட் மற்றும் அருண் பரத்வாஜ் ஆகியோருக்கு தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

பதவியேற்பு விழா:

நீதிபதிகளின் பதவியேற்பு விழா டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த நீதித்துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு செப்டம்பர் 19 அன்று ஏழு புதிய நியமனங்களை அறிவித்தது.

உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆகும். இந்த ஏழு புதிய நியமனங்களால், அதன் தற்போதைய எண்ணிக்கை 50 ஆக உயரும்.

1,122 நீதிபதி பணியிடங்கள் அனுமதி:

நீதித்துறை அதிகாரி யாஷ் பால் போர்னி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், மனோஜ் பிரசாத், அகில் குமார் மற்றும் ராம் சர்மா ஆகியோர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், உஷாராணி, குருபா சாந்தப்பா பரத் குமார் மற்றும் நெரலே வீரபத்ரையா பவானி ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 1-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் மொத்தம் 1,122 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 304 இடங்கள் காலியாக உள்ளன.

இதில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அதிகபட்சமாக 53 இடங்கள் காலியாக உள்ளன; அதைத் தொடர்ந்து கல்கத்தா (23) மற்றும் பஞ்சாப்-ஹரியானா (21) உயர் நீதிமன்றங்கள் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com