

அகர்தலாவில் இருந்து டெல்லிக்கு சென்ற இண்டிகோ விமானம் ஒன்றின் சரக்கு பகுதியில் புகை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த விமானம் லக்னோவின் சௌத்ரி சரண் சிங் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது.
6E6504 என்ற அந்த விமானம், 103 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் மாலை 6.29 மணிக்கு லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் காரணமாக எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம், பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, லக்னோ விமான நிலையம் உடனடியாக தனது அவசரகால நெறிமுறைகளை செயல்படுத்தியது. மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு, ஆம்புலன்ஸ் மற்றும் முனைய ஆதரவு பணிகளை மேற்கொண்டது.
புகை கண்டறியும் எச்சரிக்கையை தொடர்ந்து, டெல்லி செல்லும் மற்றொரு விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்ட சில நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதியன்று, வாரணாசியில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பின்பக்க சரக்கு பகுதியில் புகை கண்டறியும் எச்சரிக்கை ஒலித்ததை தொடர்ந்து, அந்த விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டது.
155 பயணிகளை ஏற்றிச் சென்ற IX1253 விமானம், அவசரகால மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பாகத் தரையிறங்கியது. முதற்கட்ட சோதனைகளில், விமானத்தில் புகை அல்லது தீ எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. பின்னர், அந்த விமானம் தொழில்நுட்ப ஆய்வுக்காக ஹேங்கருக்கு கொண்டு செல்லப்பட்டது.
சமீபத்திய வாரங்களில் வானிலை தொடர்பான காரணங்களால் பல விமானங்கள் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.
செப்டம்பர் 4-ஆம் தேதியன்று, பலத்த மழை காரணமாக டெல்லி செல்லும் நான்கு விமானங்கள் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டன. மோசமான வானிலை மற்றும் குறைந்த பார்வைத்திறன் காரணமாக, செப்டம்பர் 12-ஆம் தேதியன்று டெல்லியில் இருந்து வாரணாசிக்கு சென்ற இண்டிகோ விமானம் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டது.
செப்டம்பர் 13 அன்று, மோசமான வானிலை காரணமாக மும்பையில் இருந்து டேராடூனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்றும் லக்னோவிற்குத் திருப்பி விடப்பட்டது.