

உத்தரப் பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில், 35 வயதான தலித் சமூகத்தைச் சேர்ந்த மனோஜ் கௌதம் என்பவர், தனது மனைவி மற்றும் 10 வயது மகளின் கண் முன்னே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த காணொளி சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் கமலாபூர் காவல் நிலைய அதிகார வரம்பிற்குட்பட்ட லுதௌரா கிராமம் அருகே, பாதிக்கப்பட்டவரான மனோஜ் கௌதம், வியாழக்கிழமை மாலை தனது மகளுடன் உள்ளூர் சந்தையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரை வழிமறித்துத் தாக்கியுள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மனோஜ் கௌதமை அவரது குடும்பத்தினர் அவரை காஸ்மண்டாவில் உள்ள ஒரு சமூக சுகாதார மையத்திற்கு அவசரமாகக் கொண்டு சென்றனர்.அங்கு மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கௌதமின் ரத்தம் தோய்ந்த உடலுக்கு அருகில், அவரது மனைவியும் குழந்தைகளும் கதறி அழும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி கண்போரை கண்கலங்க வைத்துள்ளது
பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுபம் சிங், தீரேந்திர சிங் மற்றும் நரேந்திர சிங் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் அகர்வால் தெரிவித்தார்.
காவல்துறையின் தகவல்படி, கௌதம் இதற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டவர் மீது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்திருந்தார்.
பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத் இந்தக் கொலையைக் கண்டித்ததோடு, இச்சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும், வெட்கக்கேடானதாகவும், கவலைக்குரியதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும், இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும், மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை," என்று அவர் தெரிவித்துள்ளார்