முதலீடு செய்யும் பணத்திற்கு தினமும் 1% வட்டி: நூதன முறையில் ரூ.7 கோடி மோசடி

மகாராஷ்டிராவில் 67 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.7 கோடி ஏமாற்றியதாக பிரசாந்த் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Maharashtra investment fraud
Published on
Summary

மகாராஷ்டிராவில் பொதுமக்களிடம் தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு தினமும் 1% திருப்பி தருவதாக கூறி, 67 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 7 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட பிரசாந்த் அங்னே என்பவர் மீது டோம்பிவ்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மகராஷ்டிராவில் உள்ள டோம்பிவ்லி பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு, பிரசாந்த் அங்னே மற்றும் அவரது மனைவி பல்லவி ஆகியோர் இணைந்து ‘கன்கன்ஸ்மார்ட் ஷேர்ஸ் அண்ட் ஸ்டாக் புரோக்கர் பிரைவேட் லிமிடெட்’ என்ற முதலீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களிடம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து 52 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 2.77 கோடிக்கும் அதிகமாக ஏமாற்றியதாக, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நிறுவனர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

தினமும் 1 சதவீதம் தருவதாக மோசடி

இந்த நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிரசாந்த் தற்போது மீண்டும் பொதுமக்களிடம், தாங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு தினமும் 1 சதவீதம் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி பணத்தை ஏமாற்றிவிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதவி காவல் ஆணையர்

இதுகுறித்து டோம்பிவ்லி உதவி காவல் ஆணையர் விஜய் மராத்தே கூறுகையில், மகராஷ்டிராவில் உள்ள மராத்தே, பாண்டுப், டோம்பிவ்லி மற்றும் தானே ஆகிய பகுதிகளில் பிரசாந்த் மீது மூன்று வழக்குகள் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து, இந்த வழக்கில் உயர்மட்ட அளவிலான விசாரணையை தொடங்கியுள்ளோம்.

தற்போது வரையில் 67 முதலீட்டாளர்கள் தாங்கள் ரூ.7 கோடி வரை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். இருப்பினும், முதலீட்டாளர்கள் இதைவிட அதிமான அளவில் பணத்தை இழந்திருக்க வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com