

வங்கக்கடலில் தீவிரமடைந்துள்ள 'அர்னாப் புயல்' ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கவும், புயலால் ஒரு உயிர் கூட பிரியாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் காக்கிநாடா மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் பவன் கல்யாண் நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில், அர்னாப் புயல் இன்று ஏனாம் அருகே கரையை கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 140 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். இதனுடன் மிக கனமழை மற்றும் திடீர் வெள்ள அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் செவ்வாய்க்கிழமைக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். குறிப்பாக, 6 கடலோர மண்டலங்களில் உள்ள 92 அதிக ஆபத்துள்ள கிராமங்களைக் கண்டறிந்து, 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முகாம்களில் தங்கியுள்ள கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு மருத்துவ மற்றும் உணவு வசதிகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாநிலம் தழுவிய மருத்துவ அவசரக் கட்டமைப்பு தயார் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஒய். சத்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
அரசின் 1,892 ஆம்புலன்ஸ்கள் (108, 104, 102) மற்றும் 367 தனியார் ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 2,259 ஆம்புலன்ஸ்கள் நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பில் இணைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மின்சார விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், மின்சாரத் தடையை உடனுக்குடன் சரி செய்யவும் கடலோர மாவட்டங்களில் 6,000 அனுபவம் வாய்ந்த மின்வாரிய ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் கொட்டிபதி ரவி குமார் தெரிவித்துள்ளார்.
விவசாயத்துறை அமைச்சர் கிஞ்சராபு அச்சநாயுடு, ஸ்ரீகாகுளம், பார்வதிபுரம் மன்யம் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, புயலால் பயிர்கள், கால்நடைகள் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களை மிகக் குறைந்த அளவில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
போக்குவரத்து தடையின்றி நடப்பதையும், சாலைச் சேதங்களை உடனடியாகச் சரி செய்வதையும் உறுதி செய்ய 53 கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் 57 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சாலை மற்றும் கட்டடத்துறை அமைச்சர் பி.சி. ஜனார்தன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், களப் பொறியாளர்களின் விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகள் மற்றும் குருகுலப் பள்ளிகளில் தங்கியுள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி அமைச்சர் எஸ். சவிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த ஆந்திர அரசே தற்போது அர்னாப் புயலை எதிர்கொள்ளத் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.