முதலைக்கண்ணீர் - ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் தொடர்பாக ராகுல் காந்தியை சாடிய தர்மேந்திர பிரதான்!

நீட் வினாத்தாள் கசிவுத் தொடர்பான ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு வலுவாக குரல்கொடுத்த ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் விவகாரத்திற்கு வலுவாக பேசவில்லை என விமர்சனம் எழுந்துவருகிறது.
முதலைக்கண்ணீர் - ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம் தொடர்பாக ராகுல் காந்தியை சாடிய தர்மேந்திர பிரதான்!
Published on

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்தில் ராகுல் காந்தி முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும் முன்னாள் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,

காங்கிரஸ் மாணவர்களின் நலன்கள் குறித்துத் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது. ராகுல் காந்தியிடம் உண்மைகள் இல்லை. வழக்கமாகப் பொய்களை மட்டுமேப் பேசும் எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்றத்திற்கு வரவோ அல்லது பதில்களைக் கேட்கவோ விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் பொய்களைப் பரப்பவும், முதலைக்கண்ணீர் வடிக்கவும் மட்டுமே விரும்புகிறார்கள்.

உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மீது ஆதாரமற்ற, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் அரசியல் விரக்தியையே வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.

ஆனால் காங்கிரஸோ ஜனநாயகத்தின் கோயிலான 'நாடாளுமன்றத்தை' முடக்கி, நாட்டின் மற்றும் இளைஞர்களின் நலன்களைச் சிதைத்து வருகிறது. ஏனெனில், நாட்டின் நலனை விடத் தங்கள் சொந்த நலன்களுக்கே அவர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள்.

அவையில் விவாதம் நடைபெறும்போதெல்லாம் இவர்கள் வெளியே கூச்சலையும் குழப்பத்தையும் உருவாக்குகிறார்கள். ஏனெனில், அவையில் அளிக்கப்படும் பதில்களைக் கேட்கும் திறன் அவர்களுக்கு இல்லை.

காங்கிரஸின் ஜனநாயகமும் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' ஒன்றே. அவர்கள் ஆட்சியில் உள்ள இடங்களில் இளைஞர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் ரீதியாகத் தங்களை முன்னிலைப்படுத்த விரும்பும் இடங்களில் பொய்கள் மற்றும் அமளி.

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரத்தை நாடே பார்த்தது. ஆனால் கேள்வி என்னவென்றால், ஒவ்வொரு விவகாரத்திலும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தும் ராகுல் காந்தி, இன்று ஏன் மௌனம் காக்கிறார்?

காங்கிரஸின் இந்த இரட்டை வேடத் தன்மையை நாட்டின் இளைஞர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளனர். ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்திற்கு இடமில்லை; அவசரநிலைக் கால மனப்பான்மையுடன் செயல்படும் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்டில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலப் போட்டித் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்து மாணவர்கள் பெரிய அளவில் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராகுல் காந்தியின் இரட்டை நிலைப்பாடு?

போராட்டம் நடத்திய மாணவர்கள்மீது அம்மாநில காவல்துறை தடியடி போன்ற அடக்குமுறைகளை மேற்கொண்டது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மாணவர்கள்மீது தடியடி நடத்தப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தில் அவர் மௌனம் காப்பதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே மாணவர்கள்மீதான தடியடி கண்டிக்கத்தக்கது என ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் பெரிதாக அப்போராட்டம் பற்றிப் பேசவில்லை.

இச்சூழலில் நாடாளுமன்றத்தில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மாணவர் பிரச்சனைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வேறு சில விவகாரங்களையும் இதனுடன் இணைத்து விவாதிக்க வேண்டும் என பிடிவாதம் பிடிப்பதால் அவையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்நிலையில் இதனைக் குறிப்பிட்டே தர்மேந்திர பிரதான் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com