கீரிமி லேயர் - பெற்றோரின் வருமானம் மட்டும் அடிப்படை அல்ல - மீண்டும் தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்ஹா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
Supreme Court
Published on: 

பெற்றோரின் வருமானம் அல்லது சம்பளத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஒரு நபர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த (OBC) 'கிரீமி லேயர்' (செல்வாக்கு மிக்கவர்கள்/வசதி படைத்தவர்கள்) வரம்பிற்குள் வருகிறாரா என்பதைத் தீர்மானிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஓபிசி இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதில் இருந்து பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் துறையில் பணியாற்றுவோரின் பிள்ளைகளை நீக்க, அந்தப் பிள்ளைகளின் பெற்றோா் ஈட்டும் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியாது என்று கடந்த மாா்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஒபிசி கிரீமி லேயர் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆறு மாத கால அவகாசம் அளித்திருந்தது. தற்போது அது அந்தக் காலக்கெடுவை மேலும் எட்டு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது

2026-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று வழங்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை, 2026 நவம்பர் 6 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்ஹா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், இந்தத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

ஒரு வேட்பாளரின் பெற்றோர் பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) அல்லது தனியார் துறையில் பணிபுரிந்து வழக்கமான சம்பளம் பெறுகிறார்கள் என்பதற்காக மட்டுமே, அவர்களை 'கிரீமி லேயர்' பிரிவில் சேர்த்துவிடக் கூடாது

வருமானத்தை விட, பெற்றோரின் சமூக அந்தஸ்து வகிக்கும் பதவியின் தரம் மற்றும் பணிப் பின்னணி ஆகியவையே முதன்மையாகக் கவனிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஒரு விதியும், அதற்கு இணையான பதவிகளில் இருக்கும் பொதுத்துறை அல்லது தனியார் துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கு மற்றொரு விதியும் பின்பற்றுவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமைக்கு எதிரானது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெறும் சம்பளத்தை மட்டும் வைத்து தனியார்/பொதுத்துறை ஊழியர்களின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது "விரோதமான பாகுபாடு" ஆகும் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தத் தீர்ப்பின்படி, குடிமைபணித்தேர்வு 2025-இல் பரிந்துரைக்கப்பட்ட 958 வேட்பாளர்களுக்கான பணியிட ஒதுக்கீடு புதிய விதிமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனினும், இந்தத் தீர்ப்பின் காரணமாக ஏற்கனவே முடிவடைந்த தேர்வுகள், பணி நியமனங்கள் அல்லது பணி மூப்புஆகியவை மீண்டும் மாற்றி அமைக்கப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

புதிய கொள்கை மற்றும் பதவிகளுக்கு இடையேயான சமத்துவ விதியை உருவாக்குவது முழுமையாக நிர்வாகம் மற்றும் நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது

X