காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டபோது எம்.பி. ஜான் பிரிட்டாஸ் காயம்

மார்பில் ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
CPI(M) MP John Brittas injured during police detention
Published on: 

தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாருக்கு எதிராக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போராட்டத்தின்போது, ​​டெல்லி காவல்துறையினர் தன்னை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில் சிபிஐ(எம்) தலைவர் ஜான் பிரிட்டாஸ் காயமடைந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை:

இதையடுத்து, ராஜ்யசபா எம்.பி.யான அவர் எக்ஸ்-ரே மற்றும் மருத்துவப் பரிசோதனைக்காக ஆர்.எம்.எல். (RML) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காவல்துறையினர் அவரைத் தடுத்து வைத்திருந்தபோது வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பகிர்ந்த காணொளி ஒன்றில், அவர் பேருந்தின் படிக்கட்டுகளில் சரிந்து விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, மார்பில் ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜான் பிரிட்டாஸ் கடிதம்:

இந்த சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறையின் தாக்குதல் குற்றச்சாட்டு குறித்து அவசர தலையீடு, பொறுப்புக்கூறல் மற்றும் சுதந்திரமான விசாரணை ஆகியவற்றை வலியுறுத்தி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ராஜ்யசபா தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி (CJI) ஆகியோருக்கு ஜான் பிரிட்டாஸ் கடிதம் எழுதினார்.

அரசியலமைப்பு ரீதியான அந்த மூன்று உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பிய ஒரே மாதிரியான கடிதங்களில், கன்னாட் பிளேஸ் பகுதியில் செய்தியாளர்களுடன் அமைதியாக பேசிக்கொண்டிருந்தபோது டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) ஆகியவற்றின் பணியாளர்களால் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டதாகவும், வலுக்கட்டாயமாக காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டு உள்ளே தாக்கப்பட்டதாகவும், பின்னர் சாலையோரத்தில் இறக்கிவிடப்பட்டதாகவும் பிரிட்டாஸ் குற்றம் சாட்டினார்.

சசி தரூர் கண்டனம்:

வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர், பிரிட்டாஸிடம் நடந்துகொள்ளப்பட்ட விதம் குறித்துக் கண்டனம் தெரிவித்ததுடன், இது குறித்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தினார்.

"இது அதிர்ச்சியளிக்கிறது. ஜான் பிரிட்டாஸ் மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் மதிப்புமிக்க, தீவிரமாக செயல்படும் உறுப்பினர் ஆவார்.

அக்குழுவின் தலைவராக, ஒரு சிறந்த உறுப்பினரிடம் நடந்துகொள்ளப்பட்ட இந்த மோசமான நடத்தையை கண்டிப்பதோடு, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு டெல்லி காவல் துறையை வலியுறுத்துகிறேன். ஜனநாயகத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய காவல் பணி சார்ந்த நெறிமுறைகள் உள்ளன!" என்று முன்னாள் மத்திய அமைச்சரான சசி தரூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com