ம.பி.மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு-பின்னணியும் பரபரப்பும்!

"இதனால், பா.ஜ.க-வின் 3 வேட்பாளர்களும் எளிதாக வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது."
Congress Candidate Meenakshi Natarajan's Nomination Rejected
Published on

மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவிருந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு, தேர்தல் நடத்தும் அதிகாரியால் திடீரென நிராகரிக்கப்பட்டுள்ளது. தன் மீதான நீதிமன்ற வழக்கு விவரங்களை பிரமாணப் பத்திரத்தில் மறைத்ததாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஜூன் 18-ம் தேதி நடைபெறவிருக்கும் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் சார்பில் மீனாட்சி நடராஜன் ஜூன் 8-ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுக்கள் பரிசீலனையின் போது, பா.ஜ.க வேட்பாளர் மகேஷ் கேவத் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் தேர்தல் அதிகாரியிடம் ஒரு புகாரை அளித்தனர். அதில், தெலங்கானா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு குற்றவியல் வழக்கு குறித்த விவரங்களை மீனாட்சி நடராஜன் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடாமல் மறைத்துள்ளார் என்றும், இது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினர். இந்த புகாரை ஏற்ற தேர்தல் அதிகாரி, அவரது வேட்புமனுவை நிராகரித்தார்.

தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கும் மீனாட்சி நடராஜனிடம், கடந்த 2022ஆம் ஆண்டு கார்ப்பரேட்டில் பணிபுரியும் பெண் நிர்வாகி, கும்பம் சிவக்குமார் ரெட்டி என்ற தெலங்கானா காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் புகார் அளித்தார். ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் ஹைதராபாத் போலீசாரால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2025-ல் ஹைதராபாத் நீதிமன்றத்தில் அந்த பெண் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், அந்தத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தான் கட்சியின் பொறுப்பாளரான மீனாட்சி நடராஜனிடம் முறையிட்டும், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, மீனாட்சி நடராஜனை 4-வது எதிர்மனுதாரராக சேர்த்தார். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், மீனாட்சி நடராஜனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் மட்டுமே அனுப்பியிருந்தது.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சி, இது முற்றிலும் சட்டவிரோதமான நடவடிக்கை. நீதிமன்றத்தில் ஒருவர் தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அனுப்பப்பட்ட நோட்டீஸ் மட்டுமே இது. பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டப்படியும், நீதிமன்றம் இந்த விவகாரத்தை இன்னும் முறைப்படியாக விசாரிக்கவே இல்லை. எனவே மீனாட்சி நடராஜன் இதில் குற்றவாளி அல்ல, வெறும் எதிர்மனுதாரர் மட்டுமே. அவர் மீது எந்த எஃப்.ஐ.ஆர் அல்லது குற்றவியல் வழக்கோ நிலுவையில் இல்லை. பா.ஜ.க ஜனநாயகப் படுகொலை செய்து, இடங்களைப் பறிக்கப் பார்க்கிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு பதில்வாதமாக பாஜக, "சட்டத்தின் முன் அனைவரும் சமம். தன் மீதான நீதிமன்ற நடைமுறைகளை மறைத்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தவறு. உச்ச நீதிமன்ற விதிமுறைகளின்படியே தேர்தல் அதிகாரி இந்தத் தகுதியான நடவடிக்கையை எடுத்துள்ளார்." என பதிலடி கொடுத்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 3 இடங்களில், பா.ஜ.க தங்களின் பலத்தின் அடிப்படையில் 2 இடங்களை எளிதாக வெல்ல முடியும். 3-வது இடத்திற்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் கட்சி தங்களின் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-விற்கு வாக்களிப்பதைத் தடுக்க, அவர்களை அவசர அவசரமாக கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு ரிசார்ட்டிற்கு அழைத்துச் சென்றது.

ஆனால், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் முடிந்துவிட்டதால், மீனாட்சி நடராஜனின் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியால் அங்கு மாற்று வேட்பாளரைக் களமிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பா.ஜ.க-வின் 3 வேட்பாளர்களும் எளிதாக வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது. இந்த அநீதிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் அவசரப் புகாரளித்து, சட்ட ரீதியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com