

உத்தரப் பிரதேசத்தில் யூடியூப் வீடியோ மூலம் கள்ள நோட்டுகளை அச்சடிக்க கற்றுக்கொண்டு, சுமார் ஐந்து லட்சம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அயோத்தியில் கடந்த 2024-ஆம் ஆண்டு குபேர் சிங், அர்ஜுன் சிங் என்ற நபருடன் இணைந்து ரூபாய் நோட்டுகளை எப்படித் தயாரிப்பது என்பது குறித்து திட்டமிட்டு வந்துள்ளார்.
இவர்கள் கள்ள நோட்டுகளை அச்சடிப்பது குறித்து யூடியூப் மூலம் கற்றுக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து அர்ஜுன், கல்லூரி மாணவர்களான ஷஷாங்க் குப்தா (19), ஷாந்தனு சிங் (19) மற்றும் வைபவ் சுக்லா (19) ஆகியோரை தனது குழுவில் சேர்த்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இவர்களிடம் இருந்த சுமார் 1.84 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குப்தா பி.காம் இறுதியாண்டும், ஷாந்தனு பி.ஏ. எல்.எல்.பி இரண்டாம் ஆண்டும், சுக்லா பி.சி.ஏ இறுதியாண்டும் படித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் மீது அயோத்தியா கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை குறித்து கிரேட்டர் நொய்டா துணை ஆணையர் ஸ்ரவன் குமார் கூறுகையில், “உளவுத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, கொண்ட்லி புஸ்தா அருகே நான்கு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் ரூபாய் 1.84 லட்சம் மதிப்புள்ள 920 எண்ணிக்கையில் ரூ.200 நோட்டுகள் மற்றும் ரூபாய் 1,000 ரொக்கம் மற்றும் நம்பர் பிளேட் இல்லாத ஸ்விஃப்ட் டிசையர் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.
இந்த மோசடியில் ஈடுபட்ட மற்ற நபர்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.