

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன். இவரது மகள் வீணா. இவரது ஆட்சிக் காலத்தில் கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL), தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் என்ற பெயரில் வீணாவின் நிறுவனமான எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் (Exalogic Solutions) நிறுவனத்திற்கு 2.78 கோடி ரூபாய் மதிப்பிலான முறையற்ற பணப் பரிமாற்றங்களை செய்ததாக அமலாக்கத் துறை (ED) குற்றம் சாட்டியுள்ளது.
வீணாவின் நிறுவனம், போலியான பண பரிமாற்றங்களை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு கார்ப்பரேட் கருவி (corporate vehicle) என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விசாரணை அடிப்படையில் பணமோசடி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் உள்பட 13 பேர் மீது FIR பதிவு செய்ய வேண்டும் என கேரளம் DGP-க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் நிறுவனத்திற்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள் வழங்கியது எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம். இதற்காக CMRL நிறுவனத்தில் இருந்து 2.78 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் (தற்போது இல்லை) பினராயி விஜயன் மகள் வீணா தொடங்கியது. அரசு பணத்தை முறைகேடாக பெறுவதற்காக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட பணம், முறைகேடாக துபாய்க்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை பல இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது பண மோசடிக்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தது. அதேவேளையில், தங்கள் கைகள் சுத்தமானவை என்று கேரளம் முதல்வர் பினராயி விஜய் தெரிவித்திருந்தார்.
FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை DGP-க்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், "எங்கள் தரப்பில் எந்த தவறும் நடக்கவில்லை. எந்த வகையான விசாரணையையும் நடத்தலாம் என்று சிபிஐ(எம்) தலைவர் பி.ஏ. முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.