வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை: உத்தரகாண்டில் மேகவெடிப்பால் இரும்புப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது - 16 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

பல இடங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
Uttarakhand Cloudburst
Uttarakhand
Published on

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதோடு, உள்கட்டமைப்புகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

உத்தரகாண்டில் மேகவெடிப்பு - பாலம் அடித்துச் செல்லப்பட்டது:

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், இந்தியா - சீனா எல்லை அருகே திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்நிலைகளில் அபாயகரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள நிதி பள்ளத்தாக்கில் பாய்ந்து வந்த பெருவெள்ளம், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இரும்புப் பாலத்தை அடித்துச் சென்றது. இந்த விபத்தின்போது அப்பகுதியில் நின்றிருந்த ஒரு நபரும், ஒரு வாகனமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

மேலும், தமக் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆப்பிள் மரங்கள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை முடக்கம்:

மத்திய பிரதேச மாநிலத்திலும் கனமழை நீடித்து வருகிறது. தலைநகர் போபாலில் பெய்த மழையால் நிஷாத்புரா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக 106 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

16 மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை:

மறுபுறம், பீகாரின் தென்மேற்கு மாவட்டங்களுக்குக் கனமழைக்கான 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம், நாடு முழுவதும் மொத்தம் 16 மாநிலங்களில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளதால், மீட்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com