

இந்தியா முழுவதும் இன்று குழந்தைகள் தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் ஐநா சபையின் வழிகாட்டுதலின்படி நவம்பர் 20 அன்று உலக குழந்தைகள் தினத்தைக் கொண்டாடினாலும், இந்தியாவில் மட்டும் நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுவதன் பின்னணியில் ஒரு முக்கிய வரலாற்றுத் திருப்பம் உள்ளது.
முன்னதாக, இந்தியாவிலும் சர்வதேச நாடுகளைப் போலவே நவம்பர் 20 ஆம் தேதி தான் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், நாட்டின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு, நவம்பர் 14 -ஆம் தேதி என்று மாற்றம் செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகள் மீது நேரு கொண்டிருந்த அளவற்ற அன்பு மற்றும் அவர்களின் கல்வி மீதான அவரது தொலைநோக்குப் பார்வையைப் போற்றும் வகையில், 1964 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டது.
குழந்தைகளால் அன்போடு 'சாச்சா நேரு' என்று அழைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு, ஒரு நாட்டின் எதிர்காலம் அங்குள்ள குழந்தைகள் வளர்க்கப்படும் விதத்தில் தான் உள்ளது என்று பலமாக நம்பினார்.
இந்த நாள் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான, அன்பான மற்றும் சுதந்திரமான சூழலில் வளர்வதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் சிறப்புப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
காலை வழிபாட்டுக் கூட்டங்களில், ஆசிரியர்கள் நேருவின் வாழ்க்கை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு குறித்து உரை நிகழ்த்துவது, நாடகம், நடனம், பாட்டு, மாறுவேடப் போட்டி மற்றும் கதை சொல்லுதல் போன்ற நிகழ்வுகளில் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வழக்கமான பாடப்புத்தகக் கல்வியில் இருந்து விடுபட்டு, மாணவர்களின் மகிழ்ச்சிக்காக விளையாட்டுப் போட்டிகளும், பள்ளி வளாகங்களில் சிறிய அளவிலான உணவு மற்றும் விளையாட்டுத் திருவிழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடி வருகின்றனர்.
நேரு கனவு கண்டது போல, குழந்தைகளின் மகிழ்ச்சி, ஆர்வம் மற்றும் அறிவுத்திறனைத் தூண்டும் ஒரு உன்னத நாளாக இந்த ஆண்டு 2026 குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.