15 மணி நேரம், 170-க்கும் அதிக சிசிடிவி காட்சிகள்: கடத்தப்பட்ட குழுந்தையை மீட்ட காவல் துறையினர்

குழந்தையின் தந்தை ராகேஷ் பமானியா, அவருக்கு தங்குமிடம் அளிக்க ஒப்புக்கொண்டார்.
Kidnapper
Published on

குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் கடத்தப்பட்ட ஐந்து வயது குழந்தை, காவல்துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் சில மணி நேரங்களில் மீட்கப்பட்ட சம்பவ் அரங்கேறியது. 15 மணி நேரம் நீடித்த இந்த நடவடிக்கையில், 170 இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதியாக ராஜ்கோட் மாவட்டத்தில் சந்தேக நபர் பிடிக்கப்பட்டார்.

இந்த கடத்தல் அம்ரேலியின் மோட்டா அங்காடியா கிராமத்தில் நிகழ்ந்தது. 25 வயதான லலித் ரூப்சிங்பாய் ஜம்ரே என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், ஆறு மாதங்களுக்கு முன்புதான் குழந்தையின் குடும்பத்தினரை முதன்முறையாக சந்தித்துள்ளார்.

இருசக்கர வாகனத்தில் கடத்தல்:

கடத்தலுக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு, தனக்கு வேலை கிடைக்கும் வரை தற்காலிகமாக தங்க இடம் கேட்டு, லலித் அக்குடும்பத்தின் பண்ணைக்கு வந்துள்ளார். அவரை நம்பகமான அறிமுகமானவர் என்று நம்பிய, மத்திய பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் விவசாய தொழிலாளியான குழந்தையின் தந்தை ராகேஷ் பமானியா, அவருக்கு தங்குமிடம் அளிக்க ஒப்புக்கொண்டார்.

சம்பவம் நடந்த அன்று, குழந்தையின் பெற்றோர் தங்கள் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ​​ஒரு மோட்டார்சைக்கிள் என்ஜின் இயங்கும் சத்தம் கேட்டது. லலித் தனது ஐந்து வயது மகனுடன் ராகேஷின் பைக்கில் ஏறி செல்வதை அவர்கள் பார்த்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகும் இருவரும் திரும்பாததால், ராகேஷ் உள்ளூர் கிராமம் முழுவதும் தேடி, பக்கத்து பண்ணை உரிமையாளர்கள் எச்சரித்த பிறகு, அம்ரேலி கிராமப்புற காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

களத்தில் ஐந்து சிறப்புக் குழுக்கள்:

லலித் கைபேசி வைத்திருக்காததால், கடத்தல் வழக்கை விசாரிப்பது ஒரு கடுமையான சவாலாக அமைந்தது. இதனால், தொலைபேசி மூலம் இருப்பிடத்தை கண்டறியும் தொழில்நுட்ப வசதி சட்ட அமலாக்க துறையிடம் இல்லாமல் போனது. சந்தேக நபரின் பெயர் மற்றும் திருடப்பட்ட மோட்டார்சைக்கிளின் பதிவு எண் ஆகியவற்றை மட்டுமே ஆதாரமாக கொண்டு, காவல்துறை பல்துறை முகமைகளை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையை தொடங்கியது.

அம்ரேலி உள்ளூர் குற்றப்பிரிவு மற்றும் அம்ரேலி கிராமப்புற காவல் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து சிறப்புக் குழுக்கள் உடனடியாக களமிறக்கப்பட்டன. நெடுஞ்சாலைகள் முழுவதும் அந்த மோட்டார்சைக்கிளின் நடமாட்டத்தை கண்காணிக்க, புலனாய்வாளர்கள் அம்ரேலி மற்றும் ராஜ்கோட்டில் உள்ள கண்காணிப்புப் பிரிவுகளையும், காந்திநகரில் உள்ள திரிநேத்ரா மாநில கட்டுப்பாட்டு அறையையும் தொடர்பு கொண்டனர்.

15 மணி நேரம், 170-க்கும் அதிக சிசிடிவி காட்சிகள்:

அதனைத் தொடர்ந்து 15 மணி நேரம் நீடித்த ஒரு விசாரணையில், அதிகாரிகள் 170-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த டிஜிட்டல் தடமானது, ராஜ்கோட்-போர்பந்தர் தேசிய நெடுஞ்சாலை வழியாக, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வணிக மையங்கள் ஊடாக அதிகாரிகளை அழைத்து சென்று, இறுதியில் ராஜ்கோட்டில் உள்ள கோண்டல் பகுதியை நோக்கிய சந்தேக நபரின் பாதையை துல்லியமாக கண்டறிந்தது.

கள உளவு தகவல்களை பயன்படுத்தி, அதிகாரிகள் ராஜ்கோட்டின் வீர்பூர் பகுதி முழுவதும் உள்ள உள்ளூர் தங்குமிடங்கள், உணவகங்கள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் விவசாய நிலங்களில் தீவிர சோதனை நடத்தினர். இறுதியில், காவல்துறையினர் லலித்தை வழிமறித்தனர். அவர்கள் அவரை கைது செய்ததுடன், ஐந்து வயது குழந்தையையும் காயமின்றி பாதுகாப்பாக மீட்டனர்.

அந்த குழந்தை காவல் நிலையத்தில் உடனடியாக அதன்பெற்றோருடன் மீண்டும் இணைக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தை சேர்ந்த லலித், கடத்தலுக்கான சரியான நோக்கத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடர்வதால், அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com