

ரெயில்களில் பயணம் செய்ய ஆர்.ஏ.சி. டிக்கெட் முறையில் பாதிப் படுக்கைக்கு முழுக் கட்டணம் வசூலிப்பதாக பயணிகளிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், அந்த முறையில் மாற்றம் செய்ய ரெயில்வே வாரியம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்திய ரெயில்வேயில் முன்பதிவு பெட்டிகளில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு, ஆர்.ஏ.சி. முறையில் டிக்கெட்டுகள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்யும் பட்சத்தில், காலியாகும் படுக்கையை மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் முறையாக இது செயல்படுகிறது. இந்த நடைமுறையில், ஒரு படுக்கை இரண்டு பயணிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குறிப்பாக, கீழ்படுக்கையின் ஒரு பகுதியை இருவர் அமர்ந்து பயணிக்கும் வகையில் பிரித்து வழங்கப்படுகிறது. இதனால் இருவரும் அமர்ந்து பயணிக்க முடியும் என்றாலும், இரவு நேரத்தில் படுத்து உறங்குவதற்கு முழுமையான படுக்கை வசதி கிடைப்பதில்லை. ஆனால், இரண்டு பயணிகளிடமும் முழு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால் முழு கட்டணம் செலுத்தியும் பாதிப் படுக்கை வசதியுடன் பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலை பயணிகளுக்கு ஏற்படுகிறது. மேலும், ஒரே படுக்கையில் ஆண் மற்றும் பெண் பயணிகளை ஒதுக்கும்போது, தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான அசவுகரியங்கள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பயணிகளின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, அனைத்து ரெயில்களிலும் ஒரே மாதிரியான முன்பதிவு நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களில் ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்போர் பட்டியல் பயணச்சீட்டுகள் வழங்கப்படுவதில்லை. உறுதி செய்யப்பட்ட படுக்கைகள் மட்டுமே ஒதுக்கப்படும் வகையில் அவற்றின் முன்பதிவு நடைமுறை அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து ரெயில்களுக்கான முன்பதிவில் ஆர்.ஏ.சி. முறையை முழுமையாக ரத்து செய்வது அல்லது அதில் தேவையான மாற்றங்களைச் செய்வது தொடர்பாக ரெயில்வே வாரியம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது பயணிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.